3 மாதங்களில் 30 லட்சம் உறுப்பினர்கள் - உதயநிதியின் உத்தரவு

தமிழகம்
Updated Aug 25, 2019 | 15:41 IST | Times Now

செப்டம்பர் 14 தொடங்கி நவம்பர் 14-க்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000 வீதம் 30 லட்சம் உறுப்பினர்களை திமுக இளைஞரணியில் சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் உத்தரவு.

Udhayanidhi Stalin with DMK functionaries, திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின்
திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின்  |  Photo Credit: Twitter

சென்னை: கிண்டியில் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் அதன் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், 12 தீர்மானங்களை வாசித்தார். அப்போது, நவம்பர் மாதத்திற்குள் 30 லட்சம் உறுப்பினர்களை திமுக இளைஞரணியில் சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார்.

திமுக இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஆர்.டி. சேகர், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் வாசித்த 12 தீர்மானங்கள், இதோ...

 1. நீலகிரி, கேரளாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல். மறைந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், மறைந்த தி.மு.க. தலைவர்கள் எஸ்.ஏ.எம்.உசேன், ராதாமணி ஆகியோருக்கு இரங்கல்.
 2. 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியை ஈட்டித்தந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
 3. மத்திய மாநில அரசுகளில் காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கான அந்தஸ்தை பெற்றுத்தந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எம்.பி.க்களுக்கு நன்றி.
 4. மார்ச்  1-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.
 5. வருகிற செப்டம்பர் 14 தொடங்கி நவம்பர் 14-க்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000 வீதம் 30 லட்சம் உறுப்பினர்களை திமுக இளைஞரணியில் சேர்க்க நிர்வாகிகள் பணியாற்ற வலியுறுத்தல்.
 6. திமுக இளைஞரணியில் உறுப்பினராகச் சேர வயது வரம்பு 15-30 ஆக இருந்த நிலையில் தற்போது 18-35 என மாற்றம். உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.
 7. தூர்வாராமல் இருக்கும் நீர்நிலைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்னையை தீர்க்க திமுக இளைஞரணி கவனம் செலுத்தும். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து இப்பணி தொடங்கும்.
 8. திமுகவின் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், திமுக அரசுகளின் சாதனைகளை விளக்கும் வகையிலும், மூத்த நிர்வாகிகள் மூலம் பயிற்சிப்பாசறை கூட்டங்கள் மாவட்டந்தோறும் நடத்தப்படும்.
 9. திமுக இளைஞரணி மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், மண்டல மாநாடு நடத்தப்படும். அதன் பிறகு இளைஞரணி மாநில மாநாடு நடத்தப்படும்.
 10. தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தவர்களை பணியமர்த்தும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம். அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 11. புதிய கல்விக்கொள்கைக்கான வரைவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
 12. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் முடங்கியுள்ள தொழில்துறை நிறுவனங்களின் ஊழியர்களை வேலையிழக்கும் சூழலுக்கு தள்ளிய மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்.
NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...