இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

தமிழகம்
சு.கார்த்திகேயன்
Updated Sep 16, 2019 | 22:27 IST

"இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம்” என்று கூறி மாநிலங்களின் மொழியுணர்வு - குறிப்பாகத் தமிழ் மொழி உணர்வை அவமதித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

DMK  party's high level meeting
DMK party's high level meeting  |  Photo Credit: Twitter

சென்னை: இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து வரும் 20-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடந்தது.  இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், ஐ.பெரியசாமி,  ஆர்.எஸ்.பாரதி,  டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாட்டின் பொருளாதாரச் சரிவு - வேலை வாய்ப்புகள் இழப்பு - காஷ்மீர்ப் பிரச்சினை போன்ற முக்கியமான பிரச்சினைகளிலிருந்து இந்திய மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடும் திட்டத்துடன் “இந்தியாவின் அடையாளமாக ஒரேயொரு மொழி இருக்க வேண்டும். இந்தி மொழிதான் அந்த அடையாளத்தைக் கொடுக்கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு, திமுகவின் இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள பிறமொழிகள் அனைத்தையும் புறக்கணித்து - இந்தி மொழி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்று உள்துறை அமைச்சர்கூறியிருப்பது- நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மொழி வாரி 2 மாநிலங்களுக்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அரசியல் சட்டத்தின்அடிப்படை நோக்கங்களுக்கும் எதிரானது மட்டுமல்லாமல், அவற்றிற்கு விடப்பட்டிருக்கும் சவால் என்றும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

DMK  party's high level meeting

1937-ல் இருந்து போராட்டக் களங்களில் நின்று, அன்னைத் தமிழை திராவிடப் பேரியக்கம் அரண் போல் நின்று வெற்றிகரமாகப் பாதுகாத்துவருகிறது. முதல் களம் 1937-1940, இரண்டாவது களம் 1948-1950,மூன்றாவது களம் 1953-56, நான்காவது களம் 1959-61, ஐந்தாவது களம் 1963-1965, ஆறாவது களம் 1986 என்ற சூழலில் இப்போது மத்தியஉள்துறை அமைச்சரின் பேச்சால் - தமிழ்மொழியைப் பாதுகாக்க, ஏழாவதுகளம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுமோ என்ற பதற்றம் மக்கள் மத்தியில் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கிவிட்டது. 

முதல் இந்தித் திணிப்புப் போருக்கு தந்தை பெரியார் 1938-ல்தலைமை தாங்கியதையும், அவர் வழி வந்த அண்ணா “தமிழ் காக்கும் முதல் போரின் தளபதி”யாகிப் போராடி, முதல் முறையாகச்சிறை ஏகியதையும் ; “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்; நீ நாடி வந்தகோழையுள்ள நாடு இதல்லவே” என, பள்ளி செல்லும் இளம்பருவத்திலேயே புலி, வில், கயல் பொறித்த தமிழ்க்கொடியைக் கையில்ஏந்திக் களம் புகுந்த கலைஞர் , “வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயைவிரட்டித் திருப்பிடுவோம்” என்று திருவாரூர் வீதிகளில் மாணவர்கள்மத்தியில் எழுப்பிய எழுச்சி முழக்கங்கள் 80 ண்டுகளுக்குப் பிறகும் எங்கணும் எதிரொலித்துக் கொண்டிருப்பதையும்; இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

தாளமுத்து, நடராஜன் ஆகியோர் சிறைக் கொட்டடியிலும்,கீழப்பழுவூர் சின்னச்சாமி உள்ளிட்ட எண்ணற்ற வீரக் காளைகள் தங்கள்தேக்கு மர தேகத்தை தீக்கிரையாக்கிக் கொண்டும், அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை ராசேந்திரன் போன்றோர் துப்பாக்கிக்குண்டுகளை எதிர்கொண்டும் “தமிழ் வாழ்க” என்று முழக்கமிட்டவாறே மாண்டனர்.

DMK  party's high level meeting

திராவிட இயக்கத்தின் இத்தகைய தீரமிகு போராட்டத்தால், “இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை இணைப்பு மொழியாக ஆங்கிலமும் நீடிக்கும் என்றும்; பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்படமாட்டாது” என்றும் பாராளுமன்றத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதஜவஹர்லால் நேரு அவர்கள் அளித்த உறுதிமொழி.

“தமிழ்நாட்டில் இந்தி இனி இல்லை” என்று திமுக அரசு முதன் முதலில் அமைந்தவுடன் அண்ணா சட்டமன்றத்தில் 23.1.1968 அன்று நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இருமொழிக் கொள்கைத்தீர்மானம், 1970-களில் வடிவமைக்கப்பட்ட திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான “இந்தித் திணிப்பைஎன்றும் எதிர்ப்போம்” என்ற கலைஞரின் முழக்கம்;இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்டத்தின் 17-ஆவது பகுதியின் நகலைஎரித்து - பேராசிரியர் உள்ளிட்ட பத்து பேர் சட்டமன்றஉறுப்பினர் பதவிகளைத் துறந்த தியாகம்.

“தமிழரை வளர்த்து, தமிழைப்போற்றுவோம்” என்று 2018ல் நடைபெற்ற ஈரோடு தி.மு.க. மண்டலமாநாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலினின் உணர்ச்சி முழக்கம்;ஆகிய நிகழ்வுகளை, இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு, முக்கியமான இந்த நேரத்தில் நினைவுகூர்வது மிகவும் பொருத்தமானது என்று கருதுகிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து “ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் எனப் பெயர் மாற்றியது”, “சமஸ்கிருத மொழிவாரம்”, “அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்தியை முதன்மைப்பாடமாக வைக்க வேண்டும்”, “வங்கிகளில் பணப் பரிவர்த்தனை மின்னஞ்சல்கள், செல்போன் குறுஞ்செய்திகள் அனைத்திலும் இந்தி”,“பணம் எடுக்கும் ஏ.டி.எம். துண்டுக் காகிதத்தில் கூட இந்தி”, “தமிழகதேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி எழுத்துக்கள்”, “ இந்தியில் இந்திய சட்டஆணையத்தின் அறிக்கைகள்”, “இந்தியை ஐ.நா மன்றத்தின் ஆட்சிமொழியாக்க தீவிர நடவடிக்கை”, “பாராளுமன்றத்தில் பிரதமரும், அமைச்சர்களும் இந்தியில் பதிலளிப்பது”. “விமான மற்றும் ரயில்டிக்கெட்டுகளை இந்தியில் அச்சடித்தல்”, “தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இமற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை இந்திகட்டாய பாடம்”, “உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியில் தேர்வு எழுதுவது,நேர்காணல் நடத்துவது”, “மத்திய அரசு அலுவலகங்களில் நூற்றுக்கு நூறுசதவீதம் இந்தி மொழியில் அலுவல்களைப் பார்ப்பது”, “இந்தியில் மட்டுமேமத்திய அரசு திட்டங்களின் பெயர்கள்”, “புதிய கல்விக் கொள்கை மூலம்மும்மொழித் திட்டம் கொண்டு வரத் துடிப்பது”.

DMK  party's high level meeting

“தமிழகத்தில் உள்ளமத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மயம்”, என அவசரம் அவசரமாக,அடுக்கடுக்கான நடவடிக்கைகள் மூலம், செம்மொழியாம் தமிழுக்கும்,மற்ற மாநில மொழிகளுக்கும், மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சகம்செய்வதையும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளைத் தாய் மொழிகளாகக்கொண்டோரைத் தாழ்த்தி இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட முயற்சி செய்வதையும், யாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தக்க எதிர்வினைஆற்றாமல், காலத்தை வீணாக்க மாட்டார்கள்.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர்மோடி தலைமையிலான பாஜக மூர்க்கத்தனமான முறையில் இந்தித் திணிப்பில் ஈடுபட்டு - இந்தியாவை“இந்தி”மயமாக்க திட்டம் தீட்டிச் செயல்படுவது, மிகுந்த கவலையளிக்கிறது. எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்டமொழிகளைப் புறக்கணித்து - மத்திய அரசின் உள்துறை அமைச்சரே இந்தி மொழிக்கு மட்டும் “ஆஸ்தான தூதுவராக” மாறுவது, அரசியல்சட்டம் அளித்துள்ள மொழி வாரி மாநிலங்கள் எனும் அடிப்படைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே “இந்தித் திணிப்பை”உடனடியாகக் கைவிட்டு, நாட்டைமுன்னேற்றும் உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசை, இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

“இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம்” என்று கூறி,மாநிலங்களின் மொழியுணர்வு - குறிப்பாகத் தமிழ் மொழி உணர்வைஅவமதித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,தனது கருத்தைத் திரும்பப் பெற்று, நாடு மேம்பட வழிவிட வேண்டும் என்றும்; மக்கள் அளித்திருக்கும் பெரும்பான்மையை, நாட்டில் கிளர்ச்சிகள் மூலம் அமைதி இன்மையை ஏற்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியும் களம் காணத் தயாராகிறது திமுக.

அன்னைத் தமிழுக்கும் பிற மாநிலத்தவரின் தாய்மொழிகளுக்கும் இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்திடவேண்டிய பொறுப்பு பெரியார் - அண்ணா - தலைவர் கலைஞர் வழியில் தாய்மொழி காக்கும் திமுக இருக்கிறது.

DMK  party's high level meeting

பாஜக அரசின் நச்சு எண்ணத்தை வளரவிட்டால் அது விஷ விருட்சமாகி இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்துவிடக் கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்து முதற்கட்டமாக திமுக 20-9-2019 (வெள்ளிக்கிழமை) அன்று காலை10.00 மணி அளவில், தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” எனும் களம் காணுமென இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது.

கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின்படி, கழகத்தினர் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்பதுடன், இளைஞர்கள் - மாணவ, மாணவியர் - மகளிர் -தமிழுணர்வு கொண்ட சான்றோர் - ஆன்மீக வழிநடப்போர் என அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து - ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு முழங்கிட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.” இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEXT STORY