சமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது அதிமுக அரசின் வாடிக்கை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழகம்
Updated Nov 17, 2019 | 22:19 IST | Times Now

சமூகநீதியை நிலைநாட்டுவதில் அ.தி.மு.க. அரசின் சட்டத் தோல்விக்கு கண்டனம் தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

MK Stalin, DMK president
மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்  |  Photo Credit: Twitter

சென்னை: இடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்கவும், சமூகநீதி முழுமையாக நிலைநாட்டவும் அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு ஊழியர்களின் (பணி நிபந்தனைச்) சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு எதிராக நடைபெற்ற வழக்கில், அ.தி.மு.க. அரசின், "சட்ட அறிவுப் பற்றாக்குறையால்" - இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படும் 'பணி மூப்பு'க் (Seniority) கொள்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

சமூகநீதியை நிலைநாட்டுவதில் அ.தி.மு.க. அரசின் சட்டத் தோல்விக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது, இந்த அரசின் வாடிக்கை என்பது, இந்த வழக்கிலும் உறுதியாகி விட்டது, வேதனை தருவதாக அமைந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்த போது - '100 பாயிண்ட் ரோஸ்டர் முறை', '200' பாயிண்ட் ரோஸ்டர் முறையாக உயர்த்தப்பட்டு - 69 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

சீனியாரிட்டியில் இருந்த ரோஸ்டர் முறையைப் பாதுகாக்க அ.தி.மு.க. அரசு முதலில் தவறி - பிறகு அதைப் பாதுகாக்க 14.9.2016ல் பிறப்பித்த சட்டம், உரிய சட்ட நுணுக்கங்களுடன் கொண்டு வரப்படாததால், இன்று உயர்நீதிமன்றம் அந்தச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகளை ரத்து செய்திருக்கிறது. இதனால், அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் பதவி உயர்வுகளும், 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய சமூகநீதியின் முழுப் பயனும் பேராபத்திற்கு உள்ளாகியுள்ளன.

"போதிய தகவல்கள், தேவையான ஆதாரங்கள் அடிப்படையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. மாறாக, அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை தமிழக அரசு இனிமேலாவது எண்ணிப்பார்த்து, மூத்த வழக்கறிஞர்களின் சட்ட ஆலோசனைகளைப் பெற்று - 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பலன், அனைத்து இடஒதுக்கீட்டுப் பயனாளிகளுக்கும் தடையின்றிச் செல்வதற்கும், சமூகநீதி முழுவதும் நிலைநாட்டப்படுவதற்கும் அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளாா்.

NEXT STORY