ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகம்
Updated Sep 18, 2019 | 19:48 IST | Times Now

செப் 20ஆம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. எந்த நிலையிலும் ஹிந்தி திணிப்பை திமுக எதிர்க்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்
DMK President MK Stalin announced protest against imposition of Hindi has been postponed  |  Photo Credit: ANI

செப் 20ஆம் தேதி நடக்கவிருந்த நாடு தழுவிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியை பற்றி பேசியது பெரும் சர்ச்சையானது. மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று பதிவிட்டிருந்தாா். அவரது இந்த கருத்துக்காக கடும் கண்டங்கள் எழுந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக எதிர்ப்பு கிளம்பியது. 

இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் வரும் செப் 20 ஆம் தேதி திமுக ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் செய்யவிருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலினை சந்திக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அதே சமயத்தில்தான், அமித்ஷாவும் இந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் தான் சொன்னதில்லை என்றும் தங்கள் தாய்மொழியுடன் சேர்ந்து இந்தி மொழியையும் கற்றுக்கொள்ளவே கூறியதாகவும் அந்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார். 

ஆளுநரை சந்தித்துவிட்டு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘’ ஆளுநர் என்னிட்டம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி கேட்டறிந்தார். அப்போது நான் மத்திய அரசின் பிரதிநிதி. நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன், எந்நிலையிலும் மத்திய அரசு ஹிந்தியை திணிக்காது என்று கூறினார். போலவே அமித்ஷாவும் அப்படிக் கூறவில்லை என்றும் அவர் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் வரும் செப் 20ஆம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. எந்த நிலையிலும் ஹிந்தி திணிப்பை திமுக எதிர்க்கும் ‘’ என்று கூறினார். 

NEXT STORY