கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகம்
Updated Sep 23, 2019 | 20:48 IST | Times Now

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை, பார்வைக்கு வைக்க அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

DMK leader M.K.Stalin,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  |  Photo Credit: Twitter

டெல்லி: கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம், மதுரையில் தொல்லியல் துறையின் கிளை அலுவலகம், கீழடியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை எம்.பி.க்கள் கனிமொழி, கார்த்தி சிதம்பரம், சு.வெங்கடேசன் ஆகியோர் நேரில் சந்தித்து வழங்கினர்.

மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம் பின்வருமாறு :

"தமிழர்களின் சங்க காலம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்கிற அரிய கண்டுபிடிப்பை, கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலம் அறிந்து கொண்டது தொடர்பாக, உங்களின் மேலான கவனத்திற்கு இதைக் கொண்டு வருகிறேன். இந்த அரிய கண்டுபிடிப்பானது, கலாச்சார வரலாற்றில், மிகப் பெரும் திருப்புமுனை என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

தமிழக தொல்லியல் துறை, 'கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழ் எழுத்து வடிவங்கள் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்கு உரிய சாட்சியமாக அமைந்துள்ளது. கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழ்வாய்வில், தமிழர்கள் இலக்கியத்திலும் எழுத்துக் கலையிலும் 2,600 ஆண்டுகளுக்கு முன்னரே வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பது, மறுக்க முடியாத சான்றாகத் தெரிய வந்துள்ளது.

எம்.பி.க்கள் கனிமொழி, கார்த்தி சிதம்பரம், சு.வெங்கடேசன்

பழங்கால தமிழர் நாகரிகம் என்பது, உலகின் மிகப் பழமையான நாகரிகம் என்று சொல்லப்பட்டு வந்த பிறகு, மேலும் வலு சேர்க்கும் வகையில் இது உள்ளது. அத்துடன் இந்திய வரலாற்றையே, இனி தமிழர்கள் வரலாற்றிலிருந்துதான், முன்னோக்கிப் பார்க்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. கீழடியில், நான்காவது முறையாக நடத்தப்பட்ட அகழ்வாய்வின் கண்டுபிடிப்புகள், கரிம மாதிரிகள் உள்ளிட்டவை அமெரிக்காவிலும், இத்தாலியிலும் உள்ள புகழ் வாய்ந்த சோதனைக் கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேளாண் தொழில்களில் காளைகள் - மிருகங்களை, தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள், வேளாண் சமூக அமைப்புகள் அப்போதே இருந்து வந்துள்ளதற்கான தேவையான அனைத்துச் சான்றுகளும், அந்த அகழ்வாய்வின் கண்டுபிடிப்பில் இருந்ததாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டவற்றை வைப்பதற்காக, உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இது குறித்து மாநிலங்களவையிலும், தற்போது மக்களவையிலும், கனிமொழி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.

கீழடிக்குப் பிறகு அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் சனோவ்லி என்கிற இடத்தைப் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப் போல கீழடி அகழாய்வுப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் சென்னை மண்டல அலுவலகத்துடன் தென் தமிழகத்திற்காக, மதுரையிலும், தொல்லியல் துறை அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எம்.பி.க்கள் கனிமொழி, கார்த்தி சிதம்பரம், சு.வெங்கடேசன்

கீழடியில், அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில், குஜராத் மாநிலம் வாட் நகரிலும் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட நிலையில், அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட திட்டமிட்டுள்ளதைப் போல, கீழடியிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை, பார்வைக்கு வைக்க அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும், கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க உதவிட அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; மதுரையில் தொல்லியல் துறையின் சார்பில் கிளை அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்; கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்''. இவ்வாறு அந்தக் கடிதத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

NEXT STORY
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம் Description: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை, பார்வைக்கு வைக்க அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles