தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு, ஆயுத பூஜை பேருந்து ஏற்பாடுகள் - முழு விவரம்

தமிழகம்
Updated Sep 19, 2019 | 15:36 IST | Times Now

தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு வரும் 23-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகளை ஒருங்கிணைக்கும் வகையில் மாநகர பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்படும்.

Reservation for Deepavali Special Buses to begin on September 23, தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு
தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு தேதி அறிவிப்பு  |  Photo Credit: Twitter

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு வரும் 23-ஆம் தேதி தொடங்க இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் குறித்த முதல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குறித்த விவரங்களை வெளியிட்டார். அதன்படி, ஆந்திரா மார்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். வேலூர், காஞ்சிபுரம் மற்றும் ஓசூர் மார்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திருவண்ணாமலை செல்லக்கூடிய பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். 

தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கோவை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 

வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகளை ஒருங்கிணைக்கும் வகையில் மாநகர பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்படும். சிறப்பு முன்பதிவு வரும் 23-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. கோவை, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் இதே போன்ற சிறப்பு ஏற்பாடு செய்ய சோரிக்கை விடுத்துள்ளது குறித்து அடுத்து நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

மேலும், பீக் ஹவர்ஸ் எனப்படும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் கனரக வாகனங்கள் சென்னைக்குள் வராமல் இருக்க போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தகுந்த ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இதே போல, ஆயுத பூஜை முன்னிட்டு பேருந்துகள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். வேலூர், காஞ்சிபுரம் மற்றும் ஓசூர் மார்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், அபராதத் தொகையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

NEXT STORY