திமுகவிடம் ரூ.25 கோடி தேர்தல் நிதி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள்; பிரமாணப் பத்திரத்தில் அம்பலம்!

தமிழகம்
Updated Sep 23, 2019 | 19:35 IST | Times Now

திமுக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடி நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sitaram Yechury, சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி  |  Photo Credit: IANS

புது டெல்லி: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் பெற்ற நிதியை தங்களது தேர்தல் செலவினத்தில் குறிப்பிடவில்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது. 

தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவலின்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடி நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இந்த தொகையானது மூன்று தவணைகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தவணைகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மொத்த தேர்தல் செலவு ரூ.7.2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் செலவினம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

இந்தவிவரம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது சலீம் கூறுகையில், திமுக உடன் தமது கட்சிக்கு மாநில அளவில் மட்டுமே கூட்டணி இருந்ததாகவும், தமது கட்சியின் மாநிலத் தலைமை தான் இதற்கு உரிய விளக்கம் கொடுக்க முடியும் என்றும் கூறியுள்ளாா். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மொத்தம் ரூ.79 கோடி செலவு செய்துள்ளது. இதில், கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.40 கோடி அடங்கும். அஇஅதிமுக மொத்தம் ரூ.20 கோடி செலவிட்டது. மக்களவை தேர்தலில் தொகுதி ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சம் செலவிடலாம் என்பது விதியாகும். காங்கிரஸ், பாஜக கட்சிகள் தங்களது பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

NEXT STORY