தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாா் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தமிழகம்
Updated Oct 21, 2019 | 18:46 IST | Times Now

”பாளையங்கோட்டையில் எனக்கு வீடு. அங்கிருந்து நாகர்கோவில் செல்கிறேன். நான் ரோட்டில் செல்லக்கூடாது என்று என்ன சட்டம் இருக்கிறது?” - வசந்தகுமார்

H Vasanthakumar, ஹெச்.வசந்தகுமார்
ஹெச்.வசந்தகுமார் (File Photo)  |  Photo Credit: Twitter

நாங்குநேரி: தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்ததாக கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாங்குநேரி வழியாக நாகர்கோவில் சென்று கொண்டிருந்த வசந்தகுமார் எம்பி தடுத்து நிறுத்தப்பட்டாா். அவர், தேர்தல் விதிமுறைகளை மீறி நுழைந்ததாக தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் புகாா் அளித்தாா். இதனைத் தொடா்ந்து தேவையின்றி கூட்டத்தை கூட்டுதல், சம்பந்தமில்லாத நபர் தொகுதிக்குள் நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வசந்த குமார் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார் எம்பி, “சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ் - காந்தியின் தலைமையில். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சாலையில் செல்லக் கூடாது என்று சட்டம் இல்லை. தேர்தல் நடக்கும் போது பிரச்சாரம் செய்தால் தவறு என்று சொல்லலாம். பாளையங்கோட்டையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் வழியில் காவலர்கள் தடுத்து நிறுத்தி நீங்கள் அங்கே போகக்கூடாது என்று சொன்னார்கள். மாற்று வழியில் செல்வதாகக் கூறினேன். ஆனால், நாங்குநேரி காவல்நிலையத்திற்கு வாருங்கள் என்று சொன்னார்கள். இப்போது வந்திருக்கிறேன்.

நாகர்கோவிலுக்கு எந்த வழியிலும் செல்லலாம். இந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்று சட்டம் இல்லை. ஏதாவது ஒரு வாக்குச்சாவடிக்குள் சென்று பிரச்சாரம் செய்திருந்தால் சட்டத்தை மீறிவிட்டார் என்று சொல்லலாம். ரோட்டில் சென்றதற்கே இந்த நாட்டில் இப்படியொரு நிலை ஏற்படும் என்று சொன்னால் ஜனநாயகம் இப்பொழுது என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.

பாளையங்கோட்டையில் எனக்கு வீடு. அங்கிருந்து நாகர்கோவில் செல்கிறேன். நான் ரோட்டில் செல்லக்கூடாது என்று என்ன சட்டம் இருக்கிறது? நான் வாக்காளர் இல்லை, நாகர்கோவில் தொகுதி எம்.பி.இந்த வழியில் தான் போகவேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? எந்த வழியில் போனால் என்ன? காவலர்கள் மாற்று வழியில் போகச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன வழியில் சென்றும் இப்போது கைதி போல காவல்நிலையம் அழைத்து வந்துள்ளனர்.” இவ்வாறு வசந்தகுமார் கூறினார். மாலை 6 மணிக்கு நாங்குநேரி தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றதை தொடர்ந்து வசந்தகுமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

NEXT STORY