அடுத்த 24 மணிநேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழை

தமிழகம்
Updated Oct 18, 2019 | 16:37 IST | Times Now

வரும் 21, 22 தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு, ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

Regional Meteorological Centre Chennai, சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகம், புதுவையில் வெப்பச்சலனம் மற்றும் வடமேற்கு தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புவியரசன், அடுத்த 24 மணிநேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் 30 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசும் இருக்கும்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரள கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக சென்னை அயனாவரத்தில் 13 செ.மீ மழையும், பெரம்பூரில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வரும் 21, 22 தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கும், ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 9 செ.மீ மழையில் 8 செ.மீ மழை கிடைக்கப் பெற்றுள்ளது.

NEXT STORY