வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தேனி, நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் சென்னையில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு சென்னை தேனம்பேட்டை, ஓ.எம்.ஆர், ஈக்காட்டுதாங்கல், சாந்தோம் ஆகிய இடங்களில் மழை பெய்தது. இன்று அதிகாலையும் பல இடங்களில் மழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக்கடலில் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளாதால் நேற்று இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குமரி, ராமேஸ்வரம், கடலூர் ஆகிய பகுதிகளில் 40கிமீ வேகத்துக்கு பலமாக காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கவனமாக கடலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.