சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு; ராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சால் நடவடிக்கை

தமிழகம்
Updated Oct 14, 2019 | 11:36 IST | Times Now

சீமானை தலைவராக கொண்ட நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல்  ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - கே.எஸ்.அழகிரி

Seeman, சீமான்
சீமான்  |  Photo Credit: Twitter

சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும் என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, சீமானின் பேச்சைக் கடுமையாக கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: “இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரித்ததன் மூலம் தேசத்துரோக குற்றத்தை சீமான் செய்திருக்கிறார். இதன் மூலம் சமூக அமைதிக்கு கேடு விளைவித்திருக்கிறார். தமிழர் விரோதி சீமானின் கீழ்த்தரமான அநாகரிக ஆணவ பேச்சை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

இலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுகால இன்னல்களை துடைக்க ஒப்பந்தம் கண்டவர் ராஜீவ் காந்தி. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு தமிழர் தாயகபகுதி, வரதராஜ பெருமாள் தலைமையில் தமிழர் ஆட்சி என பல்வேறு உரிமைகளை பெற்றுத் தந்தவர் ராஜீவ்காந்தி. இதற்காக இலங்கை ராணுவ வீரர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானவரும் ராஜீவ் காந்தி என்பதை எவரும் மறந்திட இயலாது. ” இவ்வாறு கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் கூறினார்.

 

 

 

மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சதி திட்டத்தால் பலியாக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் உயிர்தியாகத்தை பகிரங்கமாக கொச்சைப்படுத்தும் சீமானை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறிய கே.எஸ்.அழகிரி, இத்தகைய தேசவிரோத செயலில் ஈடுபட்ட சீமானை தலைவராக கொண்ட நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல்  ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

NEXT STORY