”இனி நீ கடவுளின் குழந்தை” - சுஜித் மரணம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்

தமிழகம்
Updated Oct 29, 2019 | 11:43 IST | Times Now

சுர்ஜித்தை மீட்க இரவு பகல் பாராமல் உழைத்ததாகவும், ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து இயங்கியதாகவும் தனது கவிதையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சுர்ஜித் குறித்து கவிதை, C Vijayabaskar pens poem for Surjith
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சுர்ஜித் குறித்து கவிதை  |  Photo Credit: Twitter

சென்னை: திருச்சி நடுக்காட்டிப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கவிதையை அமைச்சர் விஜயபாஸ்கர் பகிர்ந்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க இரவு பகல் பாராமல் உழைத்ததாகவும், ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து இயங்கியதாகவும் தனது கவிதையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சுர்ஜித் மரணம் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எழுதிய உருக்கமான கவிதை:

”நான் மட்டுமல்ல
இந்த உலகமே தன் பிள்ளையாய்
நினைத்த ‘சுர்ஜித்தின்’ அழுகுரல்
என்னுள் இன்னும் ஒலிக்கிறது,
என் மனம் வலிக்கிறது!

எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான்
உணவின்றி உறக்கமின்றி
இரவுபகலாய் இமைமூடாமல் உழைத்தோம்
இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று
எண்ணவில்லை!

 

 

கருவறை இருட்டுபோல் 
உள்ளே இருப்பாய் என்று நினைத்தோம்
கல்லறை இருட்டாய் மாறும் என்று 
எண்ணவில்லை!

மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச
மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன்
இப்போது
மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில்
இதயம் கனத்து கிடக்கிறது

எண்பத்தைந்து அடி ஆழத்தில் நான் கேட்ட 
உன் மூச்சு சத்தம் தான் என்னை 
மீட்புபணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில்
பாசபிணைப்பில் இணைந்து இயங்க வைத்தது

மனதை நேற்றி கொள்கிறேன் - ஏன் என்றால்
இனி நீ கடவுளின் குழந்தை...

சோகத்தின் நிழலில் வேதனையின் வலியில்
சி.விஜயபாஸ்கர்
29/10/19”

இவ்வாறு தனது கவிதையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

NEXT STORY