என் மீது பாஜக சாயம் பூச முயற்சி; நான் சிக்கமாட்டேன் - ரஜினி திட்டவட்டம்

தமிழகம்
Updated Nov 08, 2019 | 12:13 IST | சு.கார்த்திகேயன்

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து புகைப்படம் வெளியிட்டது பாஜகவின் தனிப்பட்ட விருப்பம் - நடிகா் ரஜினிகாந்த்.

Actor Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த்  |  Photo Credit: Twitter

சென்னை: திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளாா்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் சேர்ந்து இயக்குநர் கே.பாலசந்தர் சிலையை திறந்து வைத்தனர். அதன் பிறகு நடிகா் ரஜினிகாந்த் செய்தியாளாா்களை சந்தித்தாா். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசியதாவது: 

திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி, சித்தா். அவரை எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது. ஞானி சித்தர்களை எந்த மதம், ஜாதிக்குள்ளும் அடைக்க முடியாது. திருவள்ளுவர் நாத்திகா் அல்ல; ஆத்திகர். கடவுள் நம்பிக்கை கொண்டவர்.

பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் புகைப்படத்தை காவி நிற வடிவில் வெளியிட்டது அவர்களது தனிப்பட்ட விவகாரம். நாட்டில் மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது. அது குறித்து பேசாமல் திருவள்ளுவர் விவகாரம் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.

 

 

திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன். பாரதிய ஜனதாவில் இணைவது குறித்து என்னை யாரும் அழைக்கவில்லை. பாஜகவின் இணைவது போன்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது. பாஜகவின் நிறமான காவியை எனக்கு பூச முயற்சி செய்கிறார்கள். ஆனால், நான் மாட்டமாட்டேன். எனக்கு ஒருபோதும் காவிச்சாயம் பூச முடியாது என்று ரஜினி கூறினாா்.

NEXT STORY