எழுவர் விடுதலையை நிராகரித்தாரா ஆளுநர்?

தமிழகம்
Updated Oct 18, 2019 | 12:00 IST | Times Now

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தனிப்பட்ட முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததாக பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Banwarilal Purohit, பன்வாரிலால் புரோகித்
பன்வாரிலால் புரோகித்  |  Photo Credit: Twitter

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முதல்வர் பழனிசாமியிடம் தனிப்பட்ட முறையில் ஆளுநர் இதனை தெரிவித்ததாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக ஆளுநர் இதுவரை தனது முடிவை தமிழக அரசுக்கு தெரிவிக்கவில்லை. எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு பிப்ரவரி 2014 மற்றும் மார்ச் 2016-ல் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கைகளுக்கு ஏப்ரல் 2018-ல் மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும், சர்வதேச அளவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசுக்கு பதிலளிக்கப்பட்டது.

சட்டப்பிரிவு 161-ன் படி குறிப்பிட்ட சில வழக்குகளில் குற்றவாளிகளை மன்னிக்கவும், அவர்களின் தண்டனையை நிறுத்தி வைக்கவும், குறைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பலமுறை தமிழக அரசு கோரிக்கைகள் அனுப்பிய நிலையிலும் ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் வரவில்லை.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார், பேரரிவாளன், ரவி ஆகியோர் சிறையில் உள்ளனர். இவர்களில் முருகன், சாந்தன், ராபர்ட் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை பிரஜைகள் ஆவர்.

எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரையை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பலதரப்பினரிடம் கருத்து கேட்டார். ராஜீவ் காந்தி கொலையான குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள், பேரரிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் அழைத்து பேசியது நினைவுகூரத்தக்கது.

NEXT STORY