அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்! முழு விவரம்

தமிழகம்
Updated Jun 12, 2019 | 13:49 IST | Times Now

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

AIADMK District secretaries meet
AIADMK District secretaries meet   |  Photo Credit: Twitter

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்

தீர்மானம் -1

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும், அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

AIADMK District secretaries meet

தீர்மானம் - 2

மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றிக்கு உழைத்த கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் - 3

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும் பாஜக, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

AIADMK District secretaries meet

தீர்மானம் - 4

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கிற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, ஜெயலலிதாவின் தலைமையில் பெற்றதைப் போன்று மகத்தான வெற்றியை பெற்றிட உறுதி ஏற்றும், உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் - 5

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

NEXT STORY