ஊடகங்களில் செய்தி தொடர்பாளர்கள் பேச வேண்டாம்: அதிமுக தலைமை உத்தரவு

தமிழகம்
Updated Jun 12, 2019 | 15:43 IST | Times Now

கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலை பெற்ற பின்பே செய்தித் தொடர்பாளர்கள் கருத்து கூற வேண்டும் என அதிமுக தலைமை வலியுறுத்தியுள்ளது.

AIADMK party office, அஇஅதிமுக தலைமை அலுவலகம்
அஇஅதிமுக தலைமை அலுவலகம்  |  Photo Credit: YouTube

சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதிமுக இரட்டை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழ்நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியது. ஆனால்,  வரவுள்ள உள்ளாட்சி தேர்லை எதிர்கொள்வது உள்பட 5 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது. 

இந்நிலையில், அதிமுக தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், " அதிமுக சார்பில் பத்திரிகைகள், ஊடகங்கள் வழியாகவும் இன்னபிற சமூக தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துக்கள் தெரிவிக்கும் பணிக்கென செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்றபிறகே அவர்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை பெற்றவர்கள். 

மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூக தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூக தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துக்களை கழகத்தின் கருத்துக்களாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

NEXT STORY