ஒற்றை தலைமை விவகாரம்.. விஸ்வரூபம் எடுக்குமா? அதிமுக நிர்வாகிகள் கூட்டம்!

தமிழகம்
Updated Jun 11, 2019 | 20:35 IST | Times Now

அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

chief minister Edappadi K Palaniswami and deputy chief minister O Panneerselvam
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  |  Photo Credit: Twitter

சென்னை: அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் சரியாக இருக்கும் என இரண்டு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. 

அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை, ஆளுமைமிக்க தலைவர் வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கொளுத்திப் போட்டது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இதே கருத்தை வலியுறுத்தி குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரனும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதேபோல் பலரும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உடனடியாக கூட்டாக அறிக்கை விட்டு அதிமுக நிர்வாகிகளை பொது வெளியில் கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். 

இதையடுத்து சென்னையில் 12-ம் தேதி அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் படுதோல்வி குறித்தும்,  சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மேலும், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரின் கருத்துகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. கட்சியின் உட்கட்சி விவகாரங்கள், குடும்ப அரசியல் பற்றியும் இதில் விவாதிக்கப்பட உள்ளதால் நாளைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் விஸ்வரூபம் எடுக்கும் என கூறப்படுகிறது. 
 

NEXT STORY