பள்ளிகள் அனைத்தும் கோட்சிங் சென்டர் ஆகிவிடும் - கல்விக் கொள்கை குறித்து சூர்யா விளாசல்!

தமிழகம்
Updated Jul 13, 2019 | 16:15 IST | Times Now

கல்விக் கொள்கை குறித்து நடிகர்கள் யாரும் கொண்டுகொள்ளாமல் இருக்க சூர்யா தைரியமாய் பேசியது அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா  |  Photo Credit: Twitter

நடிகர் சிவக்குமாரின் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் சூர்யா தற்போதைய கல்வி முறை குறித்து கவலைத் தெரிவித்தார். அவர் பேசியதில் இருந்து, ‘’ அகரம் பவுண்டேஷன் மூலமாக அரசு பள்ளிகளில் 2000 தன்னார்வத் தொண்டர்கள் கொண்டு அங்கே என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். அப்படியே அவர்களுடன் பேசியதில் இருந்து நாங்கள் புரிந்து கொண்டது என்னவென்றால் இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்து எந்த ஒரு விழிப்புணர்வு அவர்களிடம் போய் சேரவில்லை. இந்தப் புதிய கல்விக் கொள்கையில் இந்தியாவில் சுமார் 30 கோடி மாணவர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர், இது அவர்களின் தலைஎழுத்தை மாற்ற கூடிய ஒரு விஷயம். ஆனால் இது பற்றி பெற்றோர்களோ ஆசிரியர்களோ ஏன் கவலை கொள்ளாமல் உள்ளனர்.  

முதலில் அவர்களுக்கு சமமான தரமான கல்வியை கொடுக்காமல் நுழைவுத்தேர்வு வைத்தால் எப்படி அவர்கள் அதனைப் பற்றி சந்திக்க முடியும்?  கிராமப்புறங்களில் அங்கன்வாடி போன்ற சிறுசிறு பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிகளை மூட வேண்டும் என்று கஸ்தூரிரங்கன் கூறியுள்ளார். எங்கெல்லாம் சரியான கட்டமைப்புகள் இல்லையோ அதை சரி செய்யாமல் அப்படி பள்ளிகளை மூடினால் அந்த மாணவர்கள் எங்கே செல்வார்கள்?

1,848 பள்ளிகள் அந்த மாதிரி மூட விருக்கிறார்களாம், அந்தப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் என்ன? 3 வயசில் 3 மொழியைத் திணித்தால் அவர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள். எங்கள் வீட்டிலேயே 3 மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள், அப்படி இருக்கும்போதே 3வது மொழி கற்றுக்கொள்ள அவர்கள் சிரமப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது கிராமப்புற பள்ளிகளில் குழந்தைகள் எவ்வாறு படிப்பர்?
 
நீங்கள் அமைதியாக இருந்தால் இப்படித்தான் திணிக்கப்படும். 3, 5, 8 ஆகிய வகுப்புகளிலே அரசுத் தேர்வுகளைத் திணிக்கவிருக்கிறார்கள். 6.5 கோடி மாணவர்கள் பள்ளிக்கே படிக்க செல்வதில்லை. 95% பள்ளியில் சேரும் மாணவர்களில், 60% மட்டுமே 12ஆம் வகுப்புகளுக்கு செல்கின்றனர். தேர்வு பயத்தால் பாதி பேர் பள்ளிகளை விட்டு நின்றுவிடுகின்றனர். நிலைமை அப்படி இருக்க ஒவ்வொரு வருடமும் இவ்வளவு தேர்வுகளை எழுதச் சொல்லிவிட்டு, அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தூக்கிப் போட்டுவிட்டு நுழைவுத் தேர்வு எழுதினால் போதும் என்று திணிப்பது எந்த வகையில் நியாயம்? நீட் தேர்வில் முதல் வருடத்தில் அரசு பள்ளியில் இருந்து சென்ற மாணவர்களில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றார். பின் இரண்டு வருடங்கள் கோச்சிங் சென்டர்களில் படித்து பிறகுதான் பல அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 12ஆம் வகுப்பை முடித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இப்படி ஒரு தேர்வை சிரமப்பட்டு படிக்கவேண்டும் என்று சொன்னால் சமூகத்தின் சமநிலை பாதிக்காதா? நீட் தேர்வுக்கே இந்த நிலைமை. இன்னும் அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்றால் மாணவர்களின் கல்வி, எதிர்காலம் என்னவாகும்?

நாட்டில் கோச்சிங் சென்டர்களின் வருமானம் ஆண்டுக்கு 5000 கோடியாம். இப்படியே சென்றால் பள்ளிகளும் கோச்சிங் சென்டர்களாக உருவாகிவிடும். இப்போதே பல பள்ளிகள் கோச்சிங் சென்டர்களை ஆரம்பித்துவிட்டனர். 30,000 சம்பளம் வாங்கும் ஒரு நபர் தனது குழந்தையின் கல்விக்கு கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டியதாய் உள்ளது. மொத்தத்தில் இந்தப் புதியக் கல்விக் கொள்கை மாணவர்களுக்கு பயன் தருவதாக இல்லை என்று தனது ஆதங்கத்தை நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

கல்விக் கொள்கை குறித்து நடிகர்கள் யாரும் கொண்டுகொள்ளாமல் இருக்க சூர்யா தைரியமாய் பேசியது அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்று வருகிறது. இருப்பினும் அவர் வைத்த கோரிக்கை பெற்றோர்கள் இந்தக் கல்விக்கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதே… செய்வார்களா பெற்றோர்கள்!?

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...