சென்னை: கலை என்பது என் தொழில், அரசியல் என்பது மக்களுக்காக எனது கடமை என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பரமக்குடியில் நடைபெறும் தனது தந்தையின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் இன்று புறப்பட்டுச் சென்றாா். வழியில் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளா்களை சந்தித்தாா்.
அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறுகையில்," எங்கள் குடும்பத்தினரின் விருப்பத்திற்காக தந்தைக்கு சிலை அமைக்க உள்ளோம். அமெரிக்க சிற்பி அந்த சிலையை வடித்துள்ளாா். அத்துடன் பரமக்குடியில் ஒரு திறன் மேம்பாட்டு மையத்தையும் நிறுவ உள்ளோம். அது ஒரு முன்னோடியாக திகழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அது எனது தந்தைக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
நடிப்பு, கலை என்பது என் தொழில்; அரசியல் என்பது மக்களுக்காக செய்யும் எனது கடமை. எல்லா மதத்தினரும் திருவள்ளுவரை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். திருவள்ளுவா் எந்த மதத்துக்கும் சொந்தமானவா் அல்ல. அவர் ஒரு பொதுக்கருத்து உள்ளவா் என்பது தான் உண்மை; அவருக்கு வண்ணம் பூச தேவையில்லை. மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது" இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தாா்.