நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...

தமிழகம்
Updated Oct 15, 2019 | 15:07 IST | Times Now

அபிஜித் பானர்ஜீ மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ இணைந்து நடத்தும் ஜே-பால் எனும் அமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறது.

Abhijit Banerjee, அபிஜித் பானர்ஜீ
அபிஜித் பானர்ஜீ  |  Photo Credit: BCCL

சென்னை: வறுமை ஒழிப்பில் புதிய அணுமுறைகளை கையாண்டதற்காக அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ மற்றும் மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு 2019-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், அபிஜித் பானர்ஜீ இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், எஸ்தர் டூஃப்ளோ அவரது மனைவி ஆவார்.

1961-ஆம் ஆண்டு மும்பை மாநகரில் பிறந்த அபிஜித் பானர்ஜீ, 1988-ல் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் மசாசூசட்ஸ் தொழிற்நுட்ப கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ அதே கல்லூரியில் 1999-ஆம் அண்டு முனைவர் பட்டம் பெற்று தற்போது அங்கேயே பொருளாதார பேராசிரியராக பணியாற்றுகிறார். பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் 1972-ஆம் ஆண்டு பிறந்தவர் எஸ்தர் டூஃப்ளோ.

அபிஜித் பானர்ஜீ மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ இணைந்து நடத்தும் ஜே-பால் எனும் அமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து சுகாதாரம், கல்வி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி, சமூக நலன், சத்துணவு திட்டம், சிறுகுறு தொழில்கள், வணிக வரி ஆகிய துறைகளில் பணியாற்றுகிறது. தமிழகத்தில் பிறந்த பொருளாதார வல்லுனர் செந்தில் முல்லைநாதன் ஜே-பால் அமைப்பில் இயக்குநராக உள்ளார்.

தமிகத்திற்கு அபிஜித் பானர்ஜீ மற்றும் எஸ்தர் டூஃப்ளோ ஆற்றிய சேவை குறித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். நோபல் பரிசு வென்ற இத்தம்பதியை பாராட்டி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”இந்தியாவில் பிறந்த சர்வதேச பொருளாதார மேதையான அபிஜித் பானர்ஜீ பொருளாதார ஆராய்ச்சிகளுக்காகவும் பேராசிரியராகவும் திறம்பட பணியாற்றி வருபவர். அபிஜித் பானர்ஜீ மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ ஆகிய இருவரும் இயக்குநர்களாக உள்ள J-PAL நிறுவனமும் தமிழ்நாடு அரசும் 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஜித் பானர்ஜீ மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ உட்பட உலகப் புகழ் பெற்ற பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்துகளைப் பெற்று தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டி வருகிறது.” இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

 

 

தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அபிஜித் பானர்ஜீயை பாராட்டி வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பாராட்டு அறிக்கையில் கூறியதாவது: “பொருளாதாரத்தில் 2019-ஆம் அண்டிற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள். கல்வி மற்றும் மருத்துவத்தில் இவர்கள் ஆற்றிய பணி முக்கியத்துவம் வாய்ந்தது. வரும் காலங்களில் உலகெங்கிலும் வருமையை ஒழிக்க இது போன்ற பணிகள் உதவும் என நம்புகிறேன்.” இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

 

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு கூறியதாவது: “உலக அளவில் வறுமை ஒழிப்புக்கான புதிய அணுகுமுறையை உருவாக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜீ, எஸ்தர் டூஃப்ளோ மற்றும்  மைக்கேல் கிரெம்மர் ஆகியோருக்கு வாழ்த்துகள்! வறுமை ஒழிப்புக்கான அவர்களின் பணி தொடரட்டும்!” இவ்வாறு ராமதாசு கூறினார்.

 

 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது: “பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றிருக்கிற இந்தியாவில் பிறந்த திரு.அபிஜித் பானர்ஜீக்கும் அவரது மனைவி திருமதி.எஸ்தர் டூஃப்ளோவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொல்கத்தா மாநில பல்கலைக்கழகத்தில் படித்த அபிஜித், உலக அளவில் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களைத் தீட்டியதற்காக நோபல் பரிசு வாங்கியிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்கிறது.” இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

 

 

அமர்த்தியா சென்னை தொடர்ந்து பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை அபிஜித் பானர்ஜீக்கு கிட்டியுள்ளது. நான்கு புத்தகங்கள் மற்றும் பல்வேறு கட்டுரைகளை அபிஜித் பானர்ஜீ எழுதியுள்ளார். இவர் எழுதிய ’ஏழை பொருளாதாரம்’ (Poor Economics) எனும் புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் விருதுகளையும் வாங்கி குவித்தது. இவை தவிற, இரண்டு ஆவணப் படங்களையும் அபிஜித் பானர்ஜீ இயக்கியுள்ளார்.

NEXT STORY