தமிழகம் முழுவதும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகம்
Updated Sep 17, 2019 | 20:01 IST | Times Now

அடுத்த ஓர் ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஓர் ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் 820 மின்சார பேரூந்துகள்,'820 electric buses to operate in tamilnadu within a year' says transport minister M.R.Vijayabaskar
ஓர் ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் 820 மின்சார பேரூந்துகள்   |  Photo Credit: Twitter

தமிழ்நாடு முழுவதும் அடுத்த ஓர் ஆண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.   

கரூர் மாவட்டத்திலுள்ள சின்னமுத்தூர் தடுப்பணையை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது மின்சார பேருந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார். தற்போது மின்சார பேருந்து ஒவ்வொரு ட்ரிப்பிற்கு பிறகும் சார்ஜ் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும்,  இனி வருங் காலங்களில் 250 கிலோ மீட்டர் வரை செல்லும் வகையில் ரீசார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பம் வந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகரங்களிலும் ஓர் ஆண்டுக்குள் 520 மின்சார பேருந்துகள் மற்றும் 300 சி-40 சுற்றுசூழல் பாதுகாப்புக்கு உட்டபட்ட 300 மின்சாரப் பேருந்துகள் என மொத்தம்  820 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.1097 கோடி ஓய்வூதிய பலனை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் அதனை இந்த வாரத்தில் அனைவருக்கும் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கடத்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒரே ஒரு மின்சாரப் பேருந்தை சென்னையில் அறிமுகப்படுத்தியது. அசோக் லேலண்ட் தயாரித்த இந்த மின்சார பேருந்து சுற்றுசுழலுக்கு பாதிப்பில்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சோதனைக்காக ஒரு பேருந்து இயக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் பல பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படவுள்ளது.      

  

NEXT STORY