புதுக்கோட்டை: பொன்னமராவதியில் தீவிரமடைந்த கலவரம்; 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

தமிழகம்
Updated Apr 19, 2019 | 20:56 IST | Times Now

மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததாலும், பதட்டம் சுற்றிச் சூழ்ந்துள்ளதாலும் பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, நல்லூர், தேனிமலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

pudukkottai, புதுக்கோட்டை
கலவரத்தில் உடைக்கப்பட்ட கார்   |  Photo Credit: Twitter

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னமராவதி  உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

புதுகை மாவட்டத்திற்கு உள்ளிட்ட பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இரண்டு மர்மநபர்கள் இழிவாக பேசிய உரையாடல் ஒன்று வாட்ஸ் ஆப்பில் பரவிவருவதாகவும், அந்த வாட்ஸ் ஆப் உரையாடலில் பேசிய அந்த இரு நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தில் மனு ஒன்றினை அளித்தனர்.

இதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். சாலையில் மரங்களை வெட்டி போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக உறுதி அளித்து அவர்களை கலைந்து போக வைத்தார். 

இந்நிலையில், இன்றும் அம்மக்களின் போராட்டம் பொன்னமராவதி பகுதியில் தீவிரமடைந்தது. அப்பகுதி பஸ் நிலையம் அருகில் முன்பு பெண்கள் உட்பட 2000க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மேலும், மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததாலும், பதட்டம் சுற்றிச் சூழ்ந்துள்ளதாலும் பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, நல்லூர், தேனிமலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பொன்னமராவதி பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்

இருதரப்பினருக்கும் இடையே மோதலைத் தவிர்க்க இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் சிவதாஸ் இந்த 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.  இந்நிலையில், 144 தடை உத்தரவிற்கு பிறகும் கட்டியாவயல் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 3 அரசுப் பேருந்துகள் மற்றும் ஒரு லாரியின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட 49 ஊராட்சிகளிலும், 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வாட்ஸ்ஆப் உரையாடல் வெளியிட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரச்சினைக்குரிய உரையாடலை வெளிநாட்டில் இருந்து கூட வெளியிட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது பொன்னமராவதி பகுதியில் தற்காலிகமாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
புதுக்கோட்டை: பொன்னமராவதியில் தீவிரமடைந்த கலவரம்; 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு! Description: மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததாலும், பதட்டம் சுற்றிச் சூழ்ந்துள்ளதாலும் பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, நல்லூர், தேனிமலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
Loading...
Loading...
Loading...