சென்னையில் 1,381 கிலோ தங்கம் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

தமிழகம்
Updated Apr 17, 2019 | 20:10 IST | Mirror Now

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1381 கிலோ தங்கம் தேர்தல் பறக்கும் படையினரால் சென்னை, ஆவடியில் பறிமுதல் செய்யப்பட்டது.

1381 kilos Gold was seized by Flying Squad in chennai
சென்னையில் 1,381 கிலோ தங்கம் பறிமுதல்  |  Photo Credit: Times Now

சென்னை: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையின் போது சென்னை, ஆவடியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, ஆவடி அடுத்த வேப்பம்பட்டு சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பெட்டி பெட்டியாக தங்கம் இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் தலா 25 கிலோ தங்கம் வீதம் மொத்தம் 55 பெட்டிகள் இருந்துள்ளது. இதையடுத்து, வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், 1,381 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பூந்தமல்லி காவல்நிலையத்தில், வாகனத்துடன் தங்கத்தை ஒப்படைத்தனர். வேனில் இருந்த 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.450 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாத பணம், பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.2628.43 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ரூ.514. 57 கோடி மதிப்பிலான பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

NEXT STORY