உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து ஷிகர் தவான் அவுட்!

விளையாட்டு
Updated Jun 19, 2019 | 17:42 IST | Times Now

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலகியுள்ளார்.

உலகக்கோப்பையில் இருந்து தவான் விலகல்
உலகக்கோப்பையில் இருந்து தவான் விலகல்  |  Photo Credit: AP

இங்கிலாந்து : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலகியுள்ளார். கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, 3 வாரங்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்த நிலையில், காயம் குணமடைய தாமதம் ஆகும் என்பதால், இந்த உலகக்கோப்பை போட்டியில்  ஷிகர் தவான் இனி விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷிகர் தவானுக்கு இடது கை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவர் ஜூலை மாதம் வரை கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு மாற்றாக ரிஷப் பந்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக இந்திய அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 117 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பேட் கமின்ஸ் பந்துவீச்சில் அவருக்கு இடது கை விரலில் அடிபட்டது. அந்த வலியுடன் ஆட்டத்தை தொடர்ந்த ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், அவர் அந்தப் போட்டியில் பீல்டிங் செய்யவில்லை. பின்னர், மருத்துவ பரிசோதனையில், அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக, கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி அரை சதம் அடித்தார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்று 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியே 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான 3 வது போட்டி கைவிடப்பட்ட நிலையில், 4 வது போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 

NEXT STORY
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து ஷிகர் தவான் அவுட்! Description: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலகியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola