இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நீடிப்பாரா ரவி சாஸ்திரி?

விளையாட்டு
Updated Jul 16, 2019 | 11:43 IST | Times Now

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நீடிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.

Ravi Shastri to continue as Head Coach?
தலைமை பயிற்சியாளராக நீடிப்பாரா ரவி சாஸ்திரி ?   |  Photo Credit: Twitter

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரோடு பதவி காலம் முடிவடையவுள்ள நிலையில், ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது. 

2017-ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே பதவி விலகியதை தொடர்ந்து, ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து உலகக்கோப்பை தொடரை விட்டு  இந்திய அணி வெளியேறியது.  தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, பயிற்சியாளர்களின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களின் பதவி காலத்தை 45 நாட்களுக்கு நீடித்தது. அதன்படி ஆகஸ்ட் மாதம் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரோடு அவர்களின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பத்தை இன்னும் ஓரிரு நாட்களில் பி.சி.சி.ஐ வெளியிடும் என்று தலைமை அதிகாரி ஒருவர் கூறினார். 

மேலும்,ரவி சாஸ்திரியை மீண்டும் விண்ணப்பிக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது. அதன்படி அவர் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர் தலைமை பயிற்சியாளராக தொடர அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிய வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகினர். எனவே தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ரவி சாஸ்திரி நீடிப்பாரா அல்லது புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.                         


 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...