31-வது பிறந்தநாளில் விராட் கோலி தனக்கே எழுதிய வாழ்த்து கடிதம்!

விளையாட்டு
Updated Nov 05, 2019 | 12:40 IST | Times Now

இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடும் விராட் கோலி, 15 வயது விராட் கோலிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Virat Kohli, விராட் கோலி
விராட் கோலி  |  Photo Credit: AP

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்தாளை இன்று கொண்டாடுகிறார். 82 டெஸ்ட் போட்டிகள், 239 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலியின் சாதனை பட்டியல் முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது; இருக்கும். தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்திலும், டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ளார் விராட் கோலி.

இந்நிலையில், இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடும் விராட் கோலி, 15 வயது விராட் கோலிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ”ஹாய் சிக்கு, முதலில், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! உன் எதிர்காலத்தை பற்றி என்னிடம் கேட்க நிறைய கேள்விகள் வைத்திருப்பாய் என்று தெரியும். மன்னிக்கவும், ஏனெனில் நிறைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாதவரை தான் ஒவ்வொரு ஆச்சரியமும் இனியதாக இருக்கும், ஒவ்வொரு சவாலும் சுவாரசியமாக இருக்கும், ஒவ்வொரு துன்பமும் பாடமாக இருக்கும். இன்று நீ இதை அறிந்திருக்க மாட்டாய் என்றாலும், இலக்கை விட பயணமே பெரியது. மேலும், அப்பயணம் சிறப்பானதாகும்!

 

 

விராட் ஆகிய உனக்கு இப்போது நான் சொல்ல விரும்புவதெல்லாம், வாழ்வில் உனக்கான பெரிய விஷயங்கள் காத்திருக்கிறது என்பது தான். ஆனால், எதிர்வரும் ஒவ்வொரு வாய்ப்புக்கும் நீ தயாராக இருக்கவேண்டும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். உன்னிடம் இருக்கும் எதையும் நீ லேசாக எடை போட்டால், தோற்றுவிடுவாய். இது எல்லோருக்கும் பொருந்தும். எழுவதற்கு நீ என்றும் மறக்காதே. முதல் முயற்சியில் தோற்றால், மீண்டும் முயற்சி செய்.

பலரும் உன்னை விரும்புவர். வெறுக்கவும் செய்வர். அவர்களில் பலரை நீ அறிந்திருக்கவும் மாட்டாய். அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தன்னம்பிக்கையை கைவிடாதே!

தந்தை இன்று உனக்கு பரிசளிக்காத ’ஷூ’ குறித்து நீ சிந்தித்துக் கொண்டிருக்காய் என்பதை நான் அறிவேன். அதெல்லாம் இன்று காலை அவர் உன்னை கட்டியணைத்ததற்கும், உன் உயரம் குறித்து கிண்டல் செய்ததற்கும் ஈடாகாது. அதை எண்ணி நெகிழ்ச்சி கொள். தந்தை சில நேரங்களில் கண்டிப்பானவராக தெரியலாம். ஆனால், அது உன் நன்மைக்காக தான். சில நேரங்களில் பெற்றோர் நம்மை புரிந்துகொள்வதில்லை என தோன்றலாம். ஆனால், ஒன்றை நினைவில் கொள் - குடும்பம் மட்டுமே எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நம்மை நேசிக்கும். நீயும் அவர்களை நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும், அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும். தந்தையிடம் அவரை மிகவும் நேசிப்பதாக சொல். இன்றே சொல், நாளையும் சொல், அடிக்கடி சொல்.

இறுதியாக, உன் மனதை பின்தொடர்ந்து செல். உன் கனவுகளை நாடிச் செல். அன்பாக இரு, பெரிதாக கனவு காண்பது எத்தகைய மாற்றத்தை உண்டாக்கும் என உலகிற்கு உணர்த்து. நீ நீயாகவே இரு.

மேலும், அந்த பராத்தாக்களை ருசி! வரும் ஆண்டுகளில் அது சற்றே ஆடம்பரம் ஆகிவிடும்...

ஒவ்வொரு நாளையும் சிறப்பாக்கு!
விராட்” 

இப்படி ஒரு வாழ்த்து கடித்தத்தை எழுதியுள்ளார் விராட். இந்த கடிதம் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளார் என்பதை நமக்குக் காட்டும்படியாக உள்ளது என்பதைத் தாண்டி கோலி போல ஆக வேண்டும் என்று உருவாகிவரும் ஒவ்வொரு குட்டி கோலிகளுக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும்!

NEXT STORY