சென்னை: சனிக்கிழமை ராஞ்சி நகரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தால் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார்.
ஜார்க்கண்ட் தலைநகரில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது 20-வது சதத்தை விராட் கோலி விலாசினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை விராட் கோலி தக்க வைப்பார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் 25 சதங்களுடன் முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி தலா 19 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 15 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆலன் பார்டர் ஆகியோரும், 14 சதங்களுடன் சர் டான் பிராட்மேன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா உடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 254 ரன்கள் அடித்த விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர சேவாக் ஆகியோர் தலா 6 இரட்டை சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.