மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சௌரவ் கங்குலி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் மூலம், பிசிசிஐ அமைப்பின் 39-வது தலைவராகியுள்ளார் சௌரவ் கங்குலி. கடந்த 33 மாதங்களாக உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த பிசிசிஐ இனி சௌரவ் கங்குலியின் தலைமையின் கீழ் இயங்கும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா செயலாளராகவும், மஹிம் வர்மா துணைத் தலைவராகவும் செயல்படுவர்.
ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாயில் பெரும் பங்கு பிசிசிஐக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து சௌரவ் கங்குலி கூறியதாவது, “கடந்த 3-4 ஆண்டுகளில் நமக்கு கிடைக்க வேண்டிய நிதி சரியாக கிடைக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் வருவாயில் 75-80 சதவிகிதம் இந்தியாவில் இருந்து செல்வதால் இப்பிரச்சனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண முயற்சிக்கப்படும்,” இவ்வாறு சௌரவ் கங்குலி கூறினார்.
பிசிசிஐ தேர்வுக் குழுவை நாளை சௌரவ் கங்குலி சந்திக்க உள்ளார். இதன் பிறகு, பங்களாதேஷ் அணியுடன் நடைபெறும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும். இந்திய அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்வது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015 முதல் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சௌரவ் கங்குலி செயல்பட்டு வந்த நிலையில், அடுத்த 9 மாதங்களுக்கு பிசிசிஐ தலைவராக பணியாற்றுவார்.