ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் அம்பத்தி ராயுடு; மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிவு!

விளையாட்டு
Updated Aug 30, 2019 | 14:19 IST | Times Now

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அம்பத்தி ராயுடு தற்போது தன் ஓய்வு முடிவினை திரும்ப பெற்றுள்ளார்.

ஓய்வு முடிவினை திரும்ப பெற்றார் அம்பத்தி ராயுடு, Ambati Rayudu Takes a U-turn in his retirement decision
ஓய்வு முடிவினை திரும்ப பெற்றார் அம்பத்தி ராயுடு  |  Photo Credit: AP

உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காததை தொடர்ந்து ஓய்வு அறிவித்த அம்பத்தி ராயுடு தற்போது அந்த முடிவை திரும்ப பெற்று மீண்டும் விளையாட முடிவு செய்துள்ளார்.

இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அம்பத்தி ராயுடு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அம்பத்தி ராயுடு தேர்வு குழுவை விமர்சிக்கும் விதமாக ஒரு டிவீட்டை பதிவு செய்திருந்தார். பின்னர் உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் மற்றும் விஜய் ஷங்கர் காயமடைந்த போது அவர்களுக்கு பதில் ரிஷப் பண்ட் மற்றும் மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த தொடர் புறக்கணிப்பால் விரக்தி அடைந்த அம்பத்தி ராயுடு கடந்த ஜூலை மாதம் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இரண்டு மாத காலத்திற்கு பிறகு தற்போது தன் ஓய்வு முடிவை திரும்ப பெற்று மீண்டும் விளையாட விரும்புவதாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார். ஓய்வு குறித்து தான் அறிவித்தது உணர்ச்சிபூர்வமான நிலையிலும் அவசரப்பட்டு எடுத்த முடிவு என அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கடினமான சூழ்நிலையில் தனக்கு உறுதுணையாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வி.வி.எஸ் லக்‌ஷ்மன் மற்றும் நோயல் டேவிட் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். திறமையான ஹைதராபாத் அணிக்கு விளையாட தான் விரும்புவதாகவும் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் ஹைதராபாத் அணியுடன் இணைந்து கொள்ள தயாராக உள்ளதகாவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.         

அம்பத்தி ராயுடுவின் ஓய்வை திரும்ப பெற்றதை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் உறுதிசெய்தது. மேலும் ராயுடுவின் இந்த முடிவை பற்றி ஹைதராபாத் கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் நோயல் டேவிட் கூறுகையில், "இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அவரிடம் இன்னும் 5 வருடத்திற்கான கிரிக்கெட் உள்ளது. இளம் வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பார். சென்ற ஆண்டு அவர் இல்லாமல் ரஞ்சி ட்ரோபியில் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். ஆனால், தற்போது அவரது அனுபவம் அணிக்கு பெரும் பலமாக இருக்கும்" என்று கூறினார். ராயுடு தற்போது ஓய்வை திரும்ப பெற்றுள்ள நிலையில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...