தென் ஆப்பிரிக்கா தொடரிலும் தோனி இல்லை;இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் தேர்வுக்குழு?

விளையாட்டு
Updated Aug 29, 2019 | 15:44 IST | Times Now

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி-20 தொடரிலும் தோனி இடம் பெறமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா தொடரிலும் தோனி இல்லை, MS Dhoni not part of South Africa T20 Series
தென் ஆப்பிரிக்கா தொடரிலும் தோனி இல்லை  |  Photo Credit: ANI

வெஸ்ட் இண்டீஸ் தொடரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி-20 தொடரிலும் தோனி இடம் பெறமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி சுற்றில் இந்தியா வெளியேறியதை தொடர்ந்து தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற செய்தி அடிபடத் தொடங்கியது. ஆனால் அவர் ஓய்வு குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் பணியாற்றவுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடப் போவதில்லை என்று தேர்வு குழுவிடம் தெரிவித்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடையவுள்ள நிலையில் அதனை தொடர்ந்து இந்திய அணி 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான அணி தேர்வு எம்.எஸ்.கே பிரசாத் தலைமையில் செப்டம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 இந்நிலையில் இந்த தொடரிலும் தோனி இடம்பெறமாட்டார் என்று தெரியவருகிறது. அடுத்த  ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள நிலையில் அதற்குள் இந்தியா இன்னும் 22 டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது. அதனால் அப்போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க  தேர்வு குழு முடிவு செய்துள்ளது. எனவே இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியில் இடம்பெறலாம் என்றும், அதில் பண்ட் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த 3 டி-20 போட்டிகளிலும் அணியில் தோனி இடம் பெறமாட்டார் என்று தெரியவருகிறது. 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது டி-20 போட்டிகளில் புறக்கணிக்கப்படுகிறார். எனவே அடுத்ததாக டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தான் தோனி விளையாட வாய்ப்புள்ளது.              

மேலும் தோனியின் ஓய்வு பற்றி கூறுகையில் பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், "ஓய்வு என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு. அதை பற்றி முடிவு செய்ய வேறு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் தேர்வு குழு 2020 டி-20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு பண்டிற்கு அதிக வாய்ப்பு அளிக்கவுள்ளது" என்றும் கூறினார். இந்த செய்தியால் தோனி ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர். மேலும் அடுத்து டிசம்பரில் தான் ஒருநாள் போட்டி நடைபெறுவதால் அதற்குள் தோனி தன் ஓய்வை அறிவித்துவிடுவாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.    

 
         

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...