சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

விளையாட்டு
Updated Sep 03, 2019 | 15:56 IST | Times Now

டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய பெண் கிரிக்கெட் விரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மிதாலி ராஜ்.

Mithali Raj, மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்  |  Photo Credit: PTI

2021 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் நோக்கில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். இதுவரை 32 டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார் மிதாலி ராஜ். இதில் 2012, 2014 மற்றும் 2016-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டிகளும் அடங்கும்.

இந்தியாவின் முதல் டி20 போட்டியில் 2006-ல் டெர்பி நகரில் நடைபெற்றது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இப்போட்டியில் மிதாலி ராஜ்தான் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். அப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து 88 டி20 போட்டிகளில் மிதாலி ராஜ் விளையாடினார். 2,364 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய பெண் கிரிக்கெட் விரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மிதாலி ராஜ். சராசரி 37.52 ரன்களுடன் 17 அரை சதங்களை விலாசினார். டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரரும் மிதாலி ராஜ்தான். 

இறுதியாக, கௌஹாத்தியில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் பங்கேற்ற மிதாலி ராஜ், 32 பந்துகளில் 30 ரன்களைக் குவித்தார். உலக அளவில் அதிக டி20 போட்டிகளில் பங்கேற்றவர்கள் பட்டியலில் 21-வது இடத்தில் உள்ள மிதாலி ராஜ், இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளார். 96 போட்டிகளில் விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“2006 முதல் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடியதை தொடர்ந்து, 2021 ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் நோக்கில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியாவிற்கு உலகக்கோப்பை வென்றுதர வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது. அதனை சிறந்த முறையில் செயலாற்ற விரும்புகிறேன். தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வரும் பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தென் ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற இந்திய டி20 அணிக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மிதாலி ராஜ் தனது ஓய்வைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

சென்ற ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாட மிதாலி ராஜ் தேர்வு செய்யப்படவில்லை. ஹர்மன்பிரீத் கவுர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்கு காரணமாகக் கூறப்பட்டது. அதன் பிறகு டி20 போட்டிகளில் மிதாலி ராஜ் பங்கேற்காமல் இருந்தார். இருப்பினும், வரவிருக்கும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் விளையாட அணி தேர்வு செய்யப்படும் போது அதில் இடம்பெற விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...