கர்நாடகா மாநிலத்தில் தொடர் மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி இருந்ததால், 2.5 கி.மீ நீச்சல் அடித்துப் போட்டிக்கு சென்ற கர்நாடக பாக்சர் நிஷான் மனோஹர் கடம் வெள்ளி பதக்கம் பெற்றார்.
கர்நாடகாவில் பெலகவி மாவட்டத்தில் உள்ள மண்ணூரை சேர்ந்தவர் நிஷான் மனோஹர் கடம். இவர் கடந்த 2 ஆண்டுகளாக பாக்சிங் கற்றுக்கொண்டு வருகிறார். தொடர் மழை காரணமாக இவர் வசிக்கும் பகுதிகளில் சாலையில் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. எனினும் மாநில பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் பங்குபெற பெங்களூர் செல்லும் ரயிலை பிடிப்பதற்காக அவரும் அவரது தந்தையும் 2.5 கி.மீ நீச்சல் அடித்து கொண்டு சென்றுள்ளனர்.
சாலைகளில் முழுவதுமாக தண்ணீர் இருந்ததால் எந்த வண்டியும் செல்ல முடியவில்லை. இதனால் அவரும் அவர் தந்தையும் ஒரு பிளாஸ்டிக் பையில் தன் பாக்சிங் கிட்டை இறுக்கமாக கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நீச்சல் அடித்து ரயிலை பிடிக்க சென்றுள்ளனர். இது போன்ற சிரமத்தையும் பாராமல் சென்ற நிஷான் மனோஹர் கடம் லைட் பிளைவெயிட் பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றார். இதனை பற்றி அவர் கூறுகையில், "நான் இந்த போட்டிக்காக காத்துகொண்டு இருந்தேன். அதனால் எக்காரணத்திற்காகவும் இதனை தவற விட நான் விரும்பவில்லை. எங்கள் பகுதியில் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் வண்டிகள் எதுவும் செல்ல முடியவில்லை. எனவே நீச்சல் அடிப்பதை தவிர வேறு வழி இல்லை" என்று அவர் தெரிவித்தார். மேலும் தங்கம் வெல்ல முடியாதற்கு வருந்துவதாகவும் அடுத்த ஆண்டு நிச்சயம் தங்கம் வெல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
12-ஆம் வகுப்பு படிக்கும் நிஷான் மனோஹரின் இந்த மனவுறுதியையும் துணிச்சலையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். எனினும் இப்பேற்பட்ட பேரிடர் அம்மாநிலத்தில் நடுந்து கொண்டிருக்கும் போது, இந்த போட்டியை வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்காதது கேள்விக்குறியாக உள்ளது. இவர் மட்டும் இன்றி பல போட்டியாளர்களும் பெங்களூருக்கு வந்து சேருவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்த சூழலில் போட்டியை நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.