நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது வங்காள தேசம்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடா் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துணை கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு தலைமை தாங்கினார்.
டாஸ் வென்ற வங்காளதேசம் பௌலிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். ரோகித் சர்மா 9 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, அதன்பிறகு களமிறங்கிய கே.எல்.ராகுல் 15, ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் ரோகித் போலவே 7 ரன்களிளேயே ஆட்டமிழந்தார். இருப்பினும் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சற்று நிதானமாக ஆடினார்கள். இறுதியில் 19.3 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே கொடுத்து 154 ரன்கள் அடித்து வங்காள தேசம் வெற்றி பெற்றது. இந்த அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 2வது டி20 போட்டி வரும் வியாழக்கிழமை குஜராத் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.