இந்தூர் டெஸ்ட்: பங்களாதேஷ் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா

விளையாட்டு
Updated Nov 16, 2019 | 23:51 IST | Times Now

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

Indore test
Indore test  |  Photo Credit: Twitter

இந்தூர்: இந்தூரில் நடைபெற்ற இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டில் இந்திய அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாசில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்து 150 ரன்னில் சுருண்டது.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்து வலுவான முன்னிலையில் இருந்தது. இரட்டைச் சதம் அடித்த மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். புஜாரா 54, ரகானே 86 ரன்களும் எடுத்திருந்தனர். ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்நிலையில் இன்று காலை 3வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே டிக்ளர் செய்வதாக விராட் கோலி அறிவித்தாா். இதையடுத்து 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் பங்களாதேஷ் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேசம் 18 ரன்கள் எடுப்பதற்குள் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனா். இதனால் பங்களாதேஷ் அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது. 

பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 4  விக்கெட்டுகள் வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா ஒரு விக்கெட்டும்   வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0  என முன்னிலை வகிக்கிறது.

 


 

NEXT STORY