இந்தூர்: இந்தூரில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்னில் ஆட்டமிழந்தது
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மொமினுல் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தாா். முழு பலத்துடன் களமிறங்கி இந்திய அணி முதலில் பந்துவீசியது. ஆரம்பம் முதலே சிறப்பாகப் பந்து வீசியதால் ரன் எடுக்க வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். ஓபனிங் பேட்ஸ்மேன் இம்ருல் கைசும், இஸ்லாமும் தலா 6 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சுகளில் ஆட்டமிழந்தார்கள்.
அடுத்து வந்த மிதுன் 10 ரன்னில் நடையை கட்டினாா். இதனால் வங்கதேசம் அணி 31 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. அதன் பின்னர் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி 37.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து வந்த மெஹ்முதுல்லா 10 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினாா்.
இதனால் 115 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் ரன் எடுக்க முடியாமலும் விக்கெட்டையும் பறிகொடுத்து திணறியது வங்கதேசம். இதற்கிடையில் நிதானமாக ஆடி வந்த முஷ்பிகுர் ரஹிமை 43 ரன்களிலும் ஹசன் மிர்ஸாவை ரன் எதுவும் எடுக்க விடாமலும் வெளியேற்றினார் ஷமி. வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்த போது தேனீர் இடைவேளை விடப்பட்டது.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு இஷாந்த் சர்மா வீசிய முதல் பந்திலேயே லிடன் தாஸ் ஆட்டமிழந்தாா். அடுத்தடுத்து வந்த தைஜுல் இஸ்லாம், அபு ஜயத் அவுட்டாக வங்களதேசம் 150 ரன்னில் சுருண்டது. இந்தியத் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.