ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சமீர் வர்மா ஏமாற்றம்!

விளையாட்டு
Updated Jun 06, 2019 | 17:26 IST | Times Now

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சிந்து, சமீர் வர்மா தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சிந்து, சமீர் வர்மா தோல்வி  |  Photo Credit: BCCL

சிட்னி: ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து ஆஸ்திரேலிய ஒபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றில் நேர்செட்களில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளார். ஆஸ்திரேலிய ஒபனில் இன்று இந்திய குழுவுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்திய வீரர்கள் சமீர் வர்மா, சாய் பிரனீத் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவிலும்,  ரான்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணை ஆடவர் இரட்டையர் பிரிவிலும் தோல்வி அடைந்த நிலையில்,  இந்தியாவுக்கான கடைசி நம்பிக்கையாக இருந்த சிந்துவும் தோல்வி அடைந்துள்ளார்.

உலகத் தரவரிசையில் 5 வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து இந்த சீசனில் முதல் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கினார்.  எனினும், தரவரிசையில் 29 வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் நிட்சான் ஜின்டாபோலிடம் 19-21, 18 -21 என்ற நேர்செட்களில் சிந்து தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இருவரும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், சிந்து அடைந்த 2வது தோல்வி இதுவாகும்.

முன்னதாக உலகத் தரவரிசையில் 12 வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சமீர் வர்மா, சீன தைபேயின் வாங்க் சூ வீயை எதிர்கொண்டார். இதில், 16-21, 21-7, 13-21 என்ற செட்கணக்கில் சமீர் வர்மா தோல்வியைத் தழுவினார். மற்றோரு போட்டியில், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆண்டனி சின்சுகா கிட்டங்கை எதிர்கொண்ட சாய் பிரனீத் 23-25, 9-21 என்ற செட்கணக்கில் போராடி வெற்றிபெற்றார். 

ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் ரான்கி ரெட்டி, சிராக் ஷெட்டி இணை  19-21, 18-21 என்ற செட் கணக்கில், 2 ஆம் நிலை ஜோடியான லி ஜின்கியூ மற்றும் லியூ யூசென்னிடம் தோல்வி அடைந்தது.

NEXT STORY