மேற்கிந்திய தீவுகளை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

விளையாட்டு
Updated Sep 03, 2019 | 11:19 IST | Times Now

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணியில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

Virat Kohli, விராட் கோலி
விராட் கோலி  |  Photo Credit: AP

ஜமைக்கா: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 257 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்ட ஹனுமா விஹாரி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கடுமையான பந்துவீச்சையும் பொருட்படுத்தாமல் முதல் இன்னிங்சில் 111 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 53 ரன்களும் விளாசினார்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தனது முதல் தொடரை வென்று 120 புள்ளிகளை மொத்தமாக அள்ளியது. உலக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணியிடம் தனது சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

தொடரை வென்றது குறித்து ட்வீட் செய்த விராட் கோலி, “ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடரை வென்றது பெருமிதம் அளிக்கிறது. ஒட்டுமொத்த அணியும் சீரும் சிறப்புமாக விளையாடியது. இந்த சிறப்பான அணியின் ஓர் அங்கமாக இருப்பது எனக்கு கிடைத்த வரம்,” என்றார்.

 

 

 

இரு போட்டிகளிலும் இந்திய அணியில் வீரர்கள் மாற்றப்படவில்லை. இதனால் விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்ஸ்மேன்களில் அஜிங்கியா ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரும், பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வேகப்பந்து பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் அரை சதத்தை இந்தத் தொடரில் பதிவு செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலி கேப்டனாக பங்கேற்ற 48 போட்டிகளில் 28 போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது. இதன் மூலம் 27 டெஸ்ட் வெற்றிகளை குவித்த முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி. அடுத்ததாக, செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக களம் காண்கிறது இந்திய அணி.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...