வெளியேறியது இந்தியா, இறுதிச் சுற்றுக்கு சென்ற நியூசிலாந்து!

விளையாட்டு
விபீஷிகா
விபீஷிகா | Principal Correspondent
Updated Jul 10, 2019 | 19:42 IST

இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியுற்று இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

Newzealand won India by 18 runs
Newzealand won India by 18 runs  |  Photo Credit: AP

அரையிறுதிச் சுற்றில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு நுழைந்துள்ளது நியூசிலாந்து. லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்த இந்தியா கண்டிப்பாக இறுதிச் சுற்றுக்கு செல்லும் என்று ரசிகர்கள் நம்பியிருந்த நிலையில் இது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி!

லீக் போட்டிகள் முடிந்த நிலையில் உலகக்கோப்பையின் அரையிறுதிச் சுற்றுகள் தொடங்கியது. அதன்படி நேற்று முதல் அரையிறுதிச் சுற்றான இந்தியா - நியூசிலாந்து போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. போட்டி நடக்கும் ஓல்ட் டிரபோர்ட் முதலில் பேட்டிங் செய்யப்போகும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

ஆட்டம் துவங்கியது முதலே இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து திணறியது. அந்த அணியின் துவக்க வீரர் மார்டின் குப்டில் 14 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக இருந்தது. நிக்கோல்ஸ் 28, கேன் வில்லியம்சன் 67,  நீஷம் 12, கிராண்ட்ஹோம் 16 ரன்னில் ஆட்டமிழந்தனர். ராஸ் டெய்லர் அரைசதம் கடந்து களத்தில் நின்றார். நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது. நீண்ட நேரமாகியும் மழையும் விட்டபாடில்லை. 

நேற்றைய போட்டியில் மழை தொடர்ந்து பெய்ததால், போட்டி நேற்று நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் படி இன்று 3:00 மணிக்கு நியூசிலாந்து மீதமிருக்கும் 3.5 ஓவர்களை விளையாடியது. ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து 249  ரன்கள் எடுத்தது. 

250 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 2வது ஓவரில் ரோஹித் சர்மா ஒரு ரன் இருக்கும்போது ஆட்டமிழந்தார். அதன்பிறகு கோலி வந்து காப்பாற்றுவார் என்று பார்த்தால் அடுத்த ஓவரிலேயே அவரும் ஒரு ரன் எடுத்து அவுட். அடுத்த ஓவரில் ராகுலும் அவுட் ஆகி 5 ரன்கள் இருக்கும்போது இந்தியா 3 பெரிய விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு 10 ஓவர் வரை தினேஷ் கார்த்திக்கும் பண்டும் விளையாடிக் கொண்டிருந்தபோது தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். அடுத்து பண்டும் ஹர்திக் பாண்டியாவும் அவுட் ஆனபோது அணியின் ஸ்கோர் 92 மட்டுமே. 

 போட்டி அவ்வளவுதான் என்று நினைத்தபோது, ஜடேஜாவும் தோனியும் கூட்டணி அமைத்தனர். ஜடேஜா சரிவில் இருந்து மீட்டு 59 பந்துகளுக்கு 77 ரன்கள் அடித்தார். ஆனால் அவரும் 47வது ஓவரில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் 10 பந்துகளில் 25 ரன்கள் வேண்டும் என்ற நிலை வந்தபோது  50 அடித்து தோனி ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு மேட்ச் நியூசிலாந்து வசம் சென்றது. அடுத்து ஆடிய புவனேஷ்குமாரும் க்ளீன் போல்டாகி வெளியாறினார். கடைசி ஓவரில் 23 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் கடைசி விக்கெட்டான பும்ரா களமிறங்கி அவரும் அவுட் ஆனார்.  இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது. 

இந்த உலகக்கோப்பையில் இறுதுச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. நாளை செமி ஃபைனலில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. அதில் வெற்றி பெற்ற அணியோடு வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து இறுதிச்சுற்றுக்கு செல்லுகிறது. 

NEXT STORY
வெளியேறியது இந்தியா, இறுதிச் சுற்றுக்கு சென்ற நியூசிலாந்து! Description: இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியுற்று இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola