டெல்லி: இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 ஆட்டம் டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடா் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துணை கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதனால் சஞ்சு சாம்சன், சிவம் துபே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனா். இருப்பினும் இருவரில் ஒருவருக்கு மட்டுமே 11 பேர் கொண்ட அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ஆல்ரவுண்டா் சிவம் துபே அந்த வாய்ப்பை பெற்றுள்ளாா். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே தொடரில் சிவம் துபே அதிரடியாக இரட்டை சதம் அடித்து மிரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியை பொறுத்தவரை ரோஹித் சர்மாவும் ஷிகா் தவானும் ஓபனிங் இறங்க உள்ளனா். 3 ஆவது வீரராக ராகுல் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வங்கதேச அணியிலும் ஷகிப் அல்ஹசன், தமிம் இக்பால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. மகமதுல்லா தலைமையிலான வங்கதேச அணியில் முஷ்பிகுர் ரகீம், முஷ்டாபிகர் ரகுமான், மொஸ்டக் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இருநாட்டு வீரர்களின் உத்தேச பட்டியல்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகா் தவான், கே.எல்.ராகுல், ஷிரேயாஸ் அய்யர், ரிஷப்பந்த், மனீஷ் பாண்டே, குர்ணால் பாண்டியா, சஞ்சு சாம்சன், கலீல் அகமது, யசுவேந்திர சாஹல், தீபக் சாஹர், ராகுல் சாகர், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, தாக்குர்.
வங்காளதேசம்: மகமதுல்லா (கேப்டன்), லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முகமது நயீம், முஷ்பிகுர் ரகீம், அதீப் உசேன், மொஸ்டக் உசேன், அமினுல் இஸ்லாம், அரபாத் சன்னி, அல்-அமின் உசேன், முஷ்டாபிசுர் ரகுமான், ஷீசைபுல் இஸ்லாம், முகமது மிதுன், தஜில இஸ்லாம், அபு ஹைதா.