புது டெல்லி: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22-26 நடைபெறும் பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய அணி விளையாடும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக இருக்கும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியை பகல்-இரவு போட்டியாக நடத்தும் முடிவை சௌரவ் கங்குலி வரவேற்றுள்ளார். இது போன்ற புதிய மாற்றங்கள் செய்வதன் மூலமே, டெஸ்ட் போட்டிகளை முன்னேற்ற முடியும் என்று சௌரவ் கங்குலி கூறியுள்ளார். “இது ஒரு நல்ல முன்னேற்றம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்த ஊக்கம் அவசியம் தேவை. நானும் எனது குழுவும் இதை வலியுறுத்தினோம். இதற்கு ஒப்புதல் வழங்கிய விராட் கோலிக்கும் எனது நன்றிகள்” இவ்வாறு சௌரவ் கங்குலி கூறினார்.
சமீபத்தில் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பகல் இரவு டெஸ்ட் போட்டி நடத்துவது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து கங்குலியின் சொந்த ஊரான கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டி, பகல்-இரவு போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இப்போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும். வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்து இரவு நேரங்களில் தெளிவாக தெரியாது என்பதால் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணி உடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.