ராஞ்சி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, ரகானேவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ராஞ்சியில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாா்.
அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் அவுட் ஆகினாா். இதனால் இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களமிறங்கிய ரகானே, ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தாா். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனா்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் சா்மா 132 பந்துகளில் சதம் விளாசி அசத்தினாா். இது அவருக்கு 6 ஆவது டெஸ்ட் சதம் ஆகும். மேலும், இந்த டெஸ்ட் தொடாில் ரோஹித் சர்மா அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். ரோஹித்துக்கு பக்கபலமாக மறுமுனையில் அசத்தி வரும் ரகானே அரைசதம் கடந்தாா். இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், ரகானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனா்.