ராஞ்சி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.
முதல் இன்னிங்சில் 497 ரன்கள் எடுத்து டிக்லேர் செய்தது இந்திய அணி. டெஸ்டில் தனது முதல் இரட்டை சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்தார். 255 பந்துகளில் 28 பவுண்டரிகள், 6 சிக்சுகளுடன் 212 ரன்கள் எடுத்தார் ரோகித் சர்மா. அஜிங்கியா ரஹானே 192 பந்துகளில் 115 ரன்கள் விலாசினார். இருவரும் நான்காவது விக்கெட் கூட்டணியில் 267 ரன்கள் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 51 ரன்கள் எடுத்தார். மேலும், 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அசத்தினார் உமேஷ் யாதவ்.
இந்திய அணி 297 ரன்கள் எடுத்து டிக்லேர் செய்ததை தொடர்ந்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களிடம் ரன் எடுக்க முடியாமல் திணறியது. முதல் இன்னிங்சில் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இணைந்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மூன்றாவது நாள் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ராஞ்சியை சேர்ந்த புதுமுகம் ஷாபாஸ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஜுபாயர் ஹம்சா 79 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். தெம்பா பவுமா 32 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 37 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு சுருண்டதை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்ய இந்திய கேப்டன் விராட் கோலி முடிவு செய்தார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து மூன்றாவது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு வெறும் 132 ரன்கள் எடுத்தனர்.
நான்காவது நாளில் ஷாபாஸ் நதீம் தனது முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி 133 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியை சுருக்கினார். முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் ஷாபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 205 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியும் இந்திய அணி பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது டெஸ்டிலும் வெற்றி பெற்றும் 3-0 என தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து 5 போட்டிகளை வென்று தரவரிசையில் முதலிடத்தை இந்தியா தக்க வைத்துள்ளது.