ஷமி வேகத்தில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா! இந்தியா அசத்தல் வெற்றி

விளையாட்டு
Updated Oct 06, 2019 | 14:29 IST | சு.கார்த்திகேயன்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

India beat South Africa by 203 runs in the first Test.
India beat South Africa by 203 runs in the first Test.  |  Photo Credit: AP

விசாகப்பட்டினம்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு 2வது இன்னிங்சின் ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த எலாகர் 2 ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கி அவுட்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 11 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்கரம் 3 ரன்னுடனும் ப்ரூன் 5 ரன்னுடனும் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாத தென்னாப்பிரிக்க வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா சார்பில் மொகமது ஷமி 5 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், அஷ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...