IND Vs BAN: ரோஹித் சர்மாவின் 100-வது டி20 போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு

விளையாட்டு
Updated Nov 07, 2019 | 11:45 IST | Times Now

ரோஹித் சர்மா இதுவரை 99 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2452 ரன்களை எடுத்துள்ளார். பங்களாதேஷ் அணியுடன் ராஜ்கோட்டில் இன்று நடைபெறும் 2-வது டி20, ரோஹித் சர்மாவுக்கு 100-வது போட்டியாகும்.

Rohit Sharma, ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா  |  Photo Credit: AP

சென்னை: ராஜ்கோட்டில் இன்று நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் 100 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெறவுள்ளார். இதன் மூலம், பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக்கின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்வார். இந்திய கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை பெண்கள் அணியில் விளையாடும் ஹர்மன்பிரீத் கவுருக்கு அடுத்தபடியாக 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய இந்தியர் என்ற பெருமை ரோஹித் சர்மாவுக்கு கிட்டும்.

32 வயதான ரோஹித் சர்மா, பங்களாதேஷ் அணியுடன் டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், அந்த போட்டியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலியை முந்திக்கொண்டு ரோஹித் சர்மா கைப்பற்றினார். இதுவரை 99 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2452 ரன்களை எடுத்துள்ளார் ரோஹித் சர்மா.

பங்களாதேஷ் அணியுடன் இந்தியா தோற்ற முதல் டி20 போட்டியாகவும் அமைந்தது. ஞாயிறன்று டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வென்றது. இந்நிலையில், 2-வது டி20-ஐ முன்னிட்டு நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: “ராஜ்கோட் மைதானத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. டெல்லி மைதானத்தின் பிட்சில் பந்து சுழன்றதால் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக அமைந்தது. டெல்லி பிட்ச்சை விட ராஜ்கோட் பிட்ச் நன்றாக இருப்பதால் எங்கள் அணியின் அணுகுமுறையும் வித்தியாசமாக இருக்கும்.” இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

இந்நிலையில், மஹா புயல் காரணமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இன்றைய தினம், ராஜ்கோட்டில் பகலில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்படும் நிலையில், இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

NEXT STORY