அடுத்த உலகக்கோப்பை டி20யில் விளையாடுவேன்: தோனியின் சர்ச்சை ட்வீட்! - உண்மை என்ன?

விளையாட்டு
Updated Jul 21, 2019 | 09:24 IST | Times Now

டி20 உலகக்கோப்பையில் கண்டிப்பாக நான் விளையாடுவேன் என்று குறிப்பிட்டு இருக்கும் இந்த போஸ்ட் தோனிதான் பதிவிட்டு இருக்கிறார் என்று  தீயாய் பரவி வருகிறது.

MS Dhoni
MS Dhoni  |  Photo Credit: AP

தோனி தனது ஓய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டதாக ஒரு ட்வீட் கடந்த இரண்டு நாட்களாக வைரல் ஆகி வருகிறது. ஆனால் அப்படி தோனி எந்த ஒரு ட்வீட்டும் வெளியிடவில்லை. 

சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பையில் இந்திய அணி அரை இறுதி சுற்று வரை சென்று நியூசிலாந்திடம் தோல்வியுற்று திரும்பியது. அரையிறுதிச் சுற்றில் தோனி அரை சதம் அடித்து இருந்தாலும் அவர் இதோடு ரிட்டயர்ட் ஆகவேண்டும் என்று பலர் கூறிவந்தனர். மேலும் இந்த உலகக் கோப்பையுடன் அவரே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் பேச்சு வந்தது. ஆனால் தோனி இது பற்றி எந்தவிதமான அறிக்கையை அறிவிப்பும் வெளியிடவில்லை.

தோனிக்கு வயதாகிவிட்டது அவர் ரிட்டையர்ட் ஆகி பயிற்சியாளராக இருப்பதில்தான் அணிக்கும் தோனிக்கும் நல்லது என்று கிரிக்கெட் வல்லுநர்களும் தோனி ரசிகர்களும் கூட கூறிவந்தனர். ஏனென்றால் ஐபிஎல் தவிற கடந்த இரண்டு ஆண்டுகளாக தோனி கலந்து கொண்ட சர்வதேச போட்டிகளில் அவ்வளவாக சோபிக்கவில்லை என்பதே அதற்கு காரணம். மேலும் அவர் பேட்டிங் செய்யும்போது பந்துகளை வீணாக்குகிறார் என்பது ஹேட்டர்களின் விவாதம்.

 இப்படியிருக்க உலகக்கோப்பை  முடிந்த கையோடு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுடன் ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 கலந்த தொடரில் விளையாட இருக்கிறது, இதில் தோனி இருப்பாரா, அவர் ஓய்வு அறிவிப்பாரா, இல்லை அணி அவரை  நீக்கி விடுமா என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் அணியில் இருப்பார் ஆனால் விளையாட மாட்டார், அடுத்த விக்கெட் கீப்பராக பண்டை மாற்றுவதற்கு அவர் பயிற்சிகளை கொடுப்பார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.

 இந்நிலையில்தான் அவர் கௌரவ ராணுவப் பதவியில் இருப்பதால் இந்த இரண்டு மாதங்கள் அங்கு தனது நேரத்தை செலவிட இருப்பதாகவும் அதனால் தானே முன்வந்து இந்த தொடரில் இருந்து  விலகிக்கொள்வதாக தெரிவித்து இருந்ததாகவும் செய்திகள் வந்தன. மேலும் இன்று அந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சமயத்தில் கடந்த இரண்டு நாட்களாக தோனி தனது ரிட்டயர்மென்ட் பற்றி ட்வீட் செய்து இருந்ததாக அவருடைய   ரசிகர்களின் பேஸ்புக்  பக்கத்தில்  தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பதிவு மிகுந்த வைரலாக சென்று கொண்டிருக்கிறது. நிஜமாகவே அப்படி கூறினாரா என்று பார்த்தால் அவர் அப்படி எந்தக் ட்வீட்டும் செய்யவில்லை.

கடந்த மே மாதம் 6ஆம் தேதிக்கு பிறகு அந்த அக்கவுண்டில் இருந்து எந்தவிதமான ட்வீட்டும் செய்யப்படவில்லை. மேலும் இந்த ட்வீட்டில் தேதியும் நேரமும் குறிப்பிடப்படவில்லை. இது ஒரு போட்டோ ஷாப் வொர்க் என்று தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த போஸ்ட்  தோனிதான் பதிவிட்டு இருக்கிறார் என்று  தீயாய் பரவி வருகிறது. அந்தப் பதிவில் அரையிறுதியில்  தோல்வி அடைந்ததால் இந்தியாவே ஏமாற்றத்தில் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என் ஓய்வு குறித்த விமர்சனங்களையும் அறிவேன். ஆனால் நான் ஓய்வு பெற இது உகந்த நேரம் அல்ல, என் டீமை இப்படி விட்டுவிட்டு செல்வது சரியாக இருக்காது. அதனால் யாரும் கவலைப்படவேண்டாம். 2020 டி20 உலகக்கோப்பையில் கண்டிப்பாக நான் விளையாடுவேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

NEXT STORY
அடுத்த உலகக்கோப்பை டி20யில் விளையாடுவேன்: தோனியின் சர்ச்சை ட்வீட்! - உண்மை என்ன? Description: டி20 உலகக்கோப்பையில் கண்டிப்பாக நான் விளையாடுவேன் என்று குறிப்பிட்டு இருக்கும் இந்த போஸ்ட் தோனிதான் பதிவிட்டு இருக்கிறார் என்று  தீயாய் பரவி வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola