பைனலுக்கு முன்னேறப்போவது யார் ? ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

விளையாட்டு
Updated Jul 11, 2019 | 10:54 IST | Times Now

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

Australia vs England
ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதல்   |  Photo Credit: AP

ஐ.சி.சி  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் எட்க்பாஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 'ஆர்ச் ரைவல்ஸ்' இடையே நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.   

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே நடந்த முதல் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதிசுற்றுக்கு முன்னேறியது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் பைனலுக்கு முன்னேறும் முனைப்பில் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பை தொடரில் 8 முறை சந்தித்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 6 முறையும் இங்கிலாந்து அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு உலகக்கோப்பையின் லீக் போட்டியில் இரு அணிகளும் சந்தித்த போது, அப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  

இங்கிலாந்து அணி 1992-ஆம் ஆண்டிற்கு பிறகு நடப்பு உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் அந்த அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறும் உள்ளது. மறுமுனையில் ஆஸ்திரேலியா அணி 5 முறை உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. பலமான இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துவதால் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டு அடுத்த நாளில் தொடங்கப்பட்டது. அதே போல் இன்று நடைபெறும் போட்டியில் மழை குறுக்கிட்டு முற்றிலும் ஆடமுடியாமல் போனால் நாளை இப்போட்டி தொடரும். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நியூசிலாந்து அணியை ஜூலை 14-ஆம் தேதி 'கிரிக்கெட்டின் மெக்கா' என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பை தொடரின் இறுதிச்சுற்றில் சந்திக்கும்.                  
 

NEXT STORY
பைனலுக்கு முன்னேறப்போவது யார் ? ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை Description: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola