ஸ்ரேயாஸ் அய்யர் அற்புத ஆட்டம்: அஸ்வின் பாராட்டு!

விளையாட்டு
Updated Apr 21, 2019 | 09:18 IST | Times Now

ஸ்ரேயாஸ் அய்யரின் சிறப்பான ஆட்டத்தால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றதாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பாராட்டு

ஸ்ரேயாஸ் அய்யருக்கு அஸ்வின் பாராட்டு
ஸ்ரேயாஸ் அய்யருக்கு அஸ்வின் பாராட்டு  |  Photo Credit: PTI

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37 வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யரின் சிறப்பான ஆட்டத்தால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இரு அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் இருந்ததால், டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த து.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 69 ரன்கள் எடுத்ததால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.  பின்னர், விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யரின் சிறப்பான ஆட்டத்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 12 புள்ளிகளை பெற்றதன்மூலம், ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரகாசமாகி உள்ளது.

கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தபோது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 175 ரன்களுக்கு மேல் குவிக்கும் வாய்ப்பு இருந்தது. கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்தபின், ஆட்டத்தின் போக்கு மாறியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி 5 ஓவர்களில், 2 விக்கெட்களை மட்டுமே இழந்தபோதும் 45 ரன்களை மட்டுமே சேர்த்தது.

பின்னர், விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின், தொடக்க வீரர் பிரித்வீ ஷா 13 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 ரன்கள் எடுத்தார். பின்னர், பொறுப்புடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் சேர்த்து, அணியை வெற்றிபெற வைத்தார். 19 புள்ளி 4 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை அடைந்ததுடன், 2 புள்ளிகளைப் பெற்றது. 

ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றும், இந்த வெற்றி அவரது பேட்டிங்கிற்கு கிடைத்த வெற்றி என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த வெற்றியின்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 வது இடத்திற்கு முன்னேறியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது.

NEXT STORY
ஸ்ரேயாஸ் அய்யர் அற்புத ஆட்டம்: அஸ்வின் பாராட்டு! Description: ஸ்ரேயாஸ் அய்யரின் சிறப்பான ஆட்டத்தால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றதாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பாராட்டு
Loading...
Loading...
Loading...