தேசிய விளையாட்டு தினம் 2019: மேஜர் தயான் சந்த் குறித்த ஸ்வாரஸ்யமான 10 தகவல்கள்

விளையாட்டு
Updated Aug 29, 2019 | 17:39 IST | Times Now

வறுமையின் காரணமாக இறுதி நாட்களில் தயான் சந்த்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் தயான் சந்த்தை அடையாளம் காணாத அதிகாரிகள் அவரை அனுமதிக்க மறுத்தனர்.

Major Dhyan Chand, மேஜர் தயான் சந்த்
மேஜர் தயான் சந்த்  |  Photo Credit: Twitter

ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கங்கள் வென்ற தயான் சந்த் தனது வாழ்நாளில் 400 கோல்களுக்கும் மேல் அடித்துள்ளார். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விளையாட்டு விருதுகள், சாகசச் செயல்களுக்கான தேசிய விருதுகள், அர்ஜுனா மற்றும் கேள் ரத்னா விருதுகள் ஆகியற்றை குடியரசுத் தலைவர் வழங்குவார்கள். அந்த வகையில், தயான் சந்த் பெயரில் விளையாட்டுத் துறையில் கோலோச்சியவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

2019-ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மேஜர் தயான் சந்த் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களைப் பார்க்கலாம்:

  1. 16 வயதில் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தார் தயான் சந்த். ராணுவத்தில் பணிபுரிந்த வேளையில் ஹாக்கி விளையாடத் தொடங்கினார். பொழுது சாய்ந்து நிலவு தோன்றும் வேளையில் தனது ஹாக்கி பயிற்சியை தயான் சந்த் துவங்குவார். இதனால், நண்பர்கள் அவரை ’சந்த்’ என்று அழைக்கத் தொடங்கினர். சந்த் என்றால் ஹிந்தியில் சந்திரன் என்று பொருள்.
  2. 1922 முதல் 1926 வரை ராணுவ ஹாக்கி போட்டிகளில் கலந்துகொண்டார். அவரது அதீத திறமையைக் கண்டுகொண்ட இந்திய ராணுவம், நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி தொடரில் இந்திய ராணுவ அணி சார்பில் விளையாட வாய்ப்பளித்தது. இத்தொடரில், இந்திய ராணுவ அணி 18 போட்டிகளில் வென்றது. இரண்டு போட்டிகளை டிரா செய்து ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது. இந்தியா திரும்பிய தயான் சந்துக்கு ’லேன்ஸ் நாயக்’ எனும் பதவி உயர்வு கிடைத்தது.
  3. விளையாட்டில் சிறந்து விளங்கிய அல்லது விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்களுக்கு ஆண்டுதோரும் மேஜர் தயான் சந்த் பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இந்த விருது வழங்கப்படும்.
  4. 1928-ல் ஆம்ஸ்டர்டேம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பாக தயான் சந்த் விளையாடினார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. 14 கோல்கள் விலாசிய தயான் சந்துக்கு அதிக கோல்கள் அடித்த பெருமை கிட்டியது.
  5. 1932-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் அங்கம் வகித்த இந்திய அணி, அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 24-1 என்ற கோல் கணக்கில் வென்று உலக சாதனை படைத்தது. 2003-ல் தான் இச்சாதனை முறியடிக்கப்பட்டது. இப்போட்டியில் தயான் சந்த் 8 கோல்களும் அவரது தமையன் ரூப் சிங் 10 கோல்களும் அடித்தனர். தொடரில் ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு கிடைத்த 35 கோல்களில் 25 கோல்கள் சந்த் மற்றும் ரூப் ஆகியோர் இணைந்து பெற்றுத்தந்தவை ஆகும். இத்தொடரில் மொத்தம் இரண்டு தங்கப்பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.
  6. 1948 முதல், வயது மூப்பின் காரணமாக ஹாக்கி போட்டிகளிருந்து மெல்ல விலகத் தொடங்கினார் தயான் சந்த். 1956-ல் தனது 51 வயதில் மேஜர் பதவியுடன் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார் தயான் சந்த்.
  7. ’கோல்’ என்ற தலைப்பில் 1952-ல் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார் தயான் சந்த். நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கி அரசு இவரை கௌரவித்தது. பணி ஓய்வுக்கு பிறகு பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டுக் கழகத்தில் தலைமை ஹாக்கி பயிற்சியாளராக பதவி வகித்தார்.
  8. தனது இறுதி நாட்களை உத்திர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் கழித்தார் தயான் சந்த். வறுமையின் காரணமாக இறுதி நாட்களில் தயான் சந்த்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியின் போது தயான் சந்த்தை அடையாளம் காணாத அதிகாரிகள் அவரை அனுமதிக்க மறுத்தனர்.
  9. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயான் சந்த் புது டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 1979 டிசம்பர் 3-ஆம் தேதி ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிரியாவிடை பெற்றார். பஞ்சாப் படைப்பிரிவின் சார்பில் முழு ராணுவ மரியாதையும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
  10. டெல்லி தேசிய மைதானத்தை தயான் சந்த் தேசிய மைதானம் என்று 2002-ல் இந்திய அரசு பெயர் மாற்றியது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் விடுதி ஒன்றுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஒரு ஹாக்கி மைதானத்திற்கு தயான் சந்தின் பெயரை சூட்டி இங்கிலாந்து அரசு கௌரவித்தது.
NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...