நவராத்திரி நிறைவடைந்த நிலையில் துர்கை பூஜையின் இறுதி நாளான இன்று நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. துர்கை அம்மன் மகிஷாசுரனை வதம் செய்த நிகழ்வை போற்றும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில் இப்பண்டிகை "தசரா" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இராவணனை இராமன் வெற்றிகொண்ட தினமாக தசரா கொண்டாடப்படுகிறது.
ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தை தொடர்ந்து பத்தாவது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் பத்தாவது நாள் என பொருட்படும். மகிஷாசுரன் உள்ளிட்ட அரக்கர்களை அழிக்க ஒன்பது நாட்கள் தவமிருந்த துர்கையை போற்றும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
தசரா என்றால் பத்தாவது நாள் என்று பொருள். இராவணனை வதம் செய்ய இராமன் தேவியை வழிபட்டு சென்றதாக நம்பப்படுகிறது. தசரா எனும் சொல்லுக்கு மற்றொரு பொருளும் உண்டு. தஸ் என்றால் தீமை, ஹரா என்றால் ஒழித்தல். எனவே, தசரா என்றால் தீமையை ஒழித்தல் எனும் பொருளும் உண்டு.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரித்தானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் தேவியை வழிபடுவது நவராத்திரியின் சிறப்பாகும். மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் தேவியை அலங்கரித்து பக்தர்கள் வழிபடுவர்.