'சம்வத்சர’ சுழற்சியில் இன்று பிறக்கிறது ‘விகாரி’ தமிழ்ப்புத்தாண்டு!

ஆன்மிகம்
Updated Apr 14, 2019 | 07:40 IST | Times Now

‘60 ஆண்டுகள் சுழற்சி முறை’ எனப்படும் சம்வத்சர சுழற்சியில் இன்று பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டிற்கு ‘விகாரி’ வருடம் என்று பெயர். விகாரி என்றால் தமிழில் ‘எழில்மாறல்’ அதாவது உருவமாற்றம் கொண்டவர்களைக் குறிக்கும் சொல்.

tamil new year, தமிழ் புத்தாண்டு
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்  |  Photo Credit: Twitter

சென்னை: உலகில் மொழி வாரியாக, நாடு வாரியாக, மக்கள் வாரியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளை புத்தாண்டு பிறப்பாக கொண்டாடுகிறோம். 

பழங்காலத்தில் சூரியனை அடிப்படையாக வைத்து புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சீனப் புத்தாண்டு, தெலுங்கு வருடப்பிறப்பு எனப்படும் உகாதி, விஷூ என வரிசைப்படுத்தப்படும் கலாச்சாரங்களில் தமிழ்ப்புத்தாண்டுக்கும் ஒரு சிறப்பான இடம் உண்டு. 

தமிழர்களின் ஆண்டுக் கணக்கின்படி வசந்தகாலம் சித்திரை மாதத்திலேயே பிறக்கிறது. அதனால் சித்திரை முதல்நாள், தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இன்று தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. 

‘60 ஆண்டுகள் சுழற்சி முறை’ எனப்படும் சம்வத்சர சுழற்சியில் இன்று பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டிற்கு ‘விகாரி’ வருடம் என்று பெயர். விகாரி என்றால் தமிழில் ‘எழில்மாறல்’ அதாவது உருவமாற்றம் கொண்டவர்களைக் குறிக்கும் சொல்லாகும்.

இன்று மதியம் 1 மணி 6 நிமிடத்துக்கு உத்தராயணப் புண்ணிய காலத்தில் பிறக்கிறது விகாரி வருடம். ஞாயிற்றுக் கிழமையில் பிறக்கும் விகாரி வருடத்திற்கு ராஜா சனி, மந்திரி நவக்கிரகங்களில் சூரியன். 

எப்படிக்கொண்டாடுவது?

’இளவேனில்’ என்னும் வசந்த காலத்தை வரவேற்கும் சித்திரை முதல்நாளில் அதிகாலையில் துயில் எழ வேண்டும். தீபாவளியின்போது கங்கா ஸ்நானம் போல் இந்நாளில் ‘மருத்து நீர்’ எனப்படும் ஒரு நீரில் குளிக்க வேண்டியது அவசியம்.  

மருத்து நீர் என்பது மஞ்சள், மிளகு, வில்வம், துளசி உள்ளிட்ட பல மூலிகைகளைக் கொண்டு காய்ச்சி தயாரிக்கப்படும் ஒரு வகையான மூலிகை நீர். இந்த நீரில் குளிக்கும்போது தலையில் கொன்றை இலையையும், காலில் புங்க மரத்து இலையையும் வைத்து குளிக்க வேண்டும். இதனால் தமிழ் வருடம் பிறக்கும்போது அவ்வருடத்தில் தோஷமுடைய நட்சத்திரங்களை உடையவர்களின் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

குளித்த பிறகு சிவப்பு நிற பட்டு அல்லது சிவப்பு வெள்ளை நிற உடைகளை அணிந்து, கண்ணாடி, தீபம், பெற்றோர், பெரியோர், மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலமானவற்றை தரிசித்து, சேவித்து இறை வழிபாடு செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் சுகம், துக்கம், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கோபம், மகிழ்ச்சி என எல்லா குணாதிசியங்களும் நிறைந்திருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் சித்திரை மாதத்தில் பூத்துக் குலுங்கும் புளிப்பு நிறைந்த மாந்தளிர், கசப்புச் சுவை கொண்ட வேப்பம்பூ, வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் பச்சடியை உண்வது முக்கியம். 

பிறகு, பருப்பு, சாம்பார், பாயசம், வடை, நீர்மோர், பானகம் ஆகியவற்றுடனான அறுசுவை உணவை உண்ணவேண்டும். புத்தாடை அணிந்து, உற்றார், உறவினருடன் மகிழ்ச்சியாக நளபாக உணவை உண்டால் அவ்வருடம் முழுவதுமே மகிச்சிகரமானதாக அமையும் என்பது தொன்றுதொட்டு நம்மிடையே இருந்து வருகின்ற நம்பிக்கை..நம்பிக்கையே வாழ்க்கை! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


 

NEXT STORY
'சம்வத்சர’ சுழற்சியில் இன்று பிறக்கிறது ‘விகாரி’ தமிழ்ப்புத்தாண்டு! Description: ‘60 ஆண்டுகள் சுழற்சி முறை’ எனப்படும் சம்வத்சர சுழற்சியில் இன்று பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டிற்கு ‘விகாரி’ வருடம் என்று பெயர். விகாரி என்றால் தமிழில் ‘எழில்மாறல்’ அதாவது உருவமாற்றம் கொண்டவர்களைக் குறிக்கும் சொல்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola